‘மலைவாழ் மக்களை கல்வித்திட்டம் முழுமையாக சென்றடையவில்லை’
பொள்ளாச்சி: டாப்சிலிப்பில் மலைவாழ் மக்கள் உண்டு, உறைவிடப்பள்ளி கட்டடத்தை கனிமொழி எம்.பி., திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், அவர் பேசியதாவது: வனம் சிறப்பாக இருந்தால் தான் இயற்கை வளங்களும் சிறப்பாக இருக்கும். அதனால், வனவளத்தையும், வனஉயிரினங்களையும் பாதுகாக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தங்கள் பெரும் திரையாக உள்ளன. பாடப்புத்தகங்களை தாண்டி உலகம் உள்ளது என்பதை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். வெளியுலக அறிவும், விஞ்ஞான அறிவும் மாணவர்களுக்கு ஆரம்ப கல்வியிலேயே கிடைக்க வேண்டும். அதற்கேற்ப பாடத்திட்டங்கள் இல்லை. செயல்வழிக்கற்றல் முறை தற்போது மாணவர்களுக்கு இருக்கும் திரையை நீக்கியுள்ளது. மற்ற மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் செயல்வழிக்கற்றல் சிறப்பாக செயல்படுவதை பார்வையிடுகின்றனர். பாடத்திட்டத்தை மாணவர்களே புரிந்து படித்து தேர்வு எழுதும் செயல் வழிக்கற்றல் முறையும் நவீனமடைய வேண்டும். மலைவாழ் மக்களுக்கு கல்வித்திட்டங்கள் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை என்று குறைபாடு உள்ளது. மலைவாழ் மக்களுக்கும் கல்வி குறித்து விழிப்புணர்வும், ஆர்வமும் இல்லாமல் உள்ளது. அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்வியின் அவசியத்தையும், பெண்களின் முன்னேற்றத்தையும் வலியுறுத்த வேண்டும். பெண் கல்வியை வலியுறுத்தி பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில், சேர்க்கையின் போது இருக்கும் மாணவிகளின் எண்ணிக்கை இறுதியாண்டில் இருப்பதில்லை. டாப்சிலிப்பில் முதல் வகுப்பில் சேரும் போது இருந்து மாணவிகளின் எண்ணிக்கை இறுதியாண்டில் குறைந்துள்ளது. உண்டு உறைவிடப்பள்ளிகளில் மாணவிகளுக்கு தனியாக உறைவிடம் இருந்தால் மாணவிகளும் முழுமையாக கல்வி கற்பார்கள். மாணவிகளுக்கு தனியாக உறைவிடம் கட்டுவதற்கு நிதி தேவைப்பட்டால் என்னுடைய நிதியில் இருந்து கூட வழங்குகிறேன். இவ்வாறு, எம்.பி., கனிமொழி பேசினார்.