உள்ளூர் செய்திகள்

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்ட டி.ஆர்.டி.ஓ.,

இந்நிலையை அடைய முக்கிய காரணம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ.,). ஏவுகணை, ஆளில்லா உளவு விமானம் மட்டுமின்றி, பொதுமக்களுக்கு பயன்படும் ஏராளமான கண்டுபிடிப்புக்களை கண்டறிந்துள்ளது டி.ஆர்.டி.ஓ., பாதுகாப்பு ஆராய்ச்சிகளை பல்கலையுடன் இணைந்து செய்வதால், புதிய பொருட்களை கண்டறிய முடியும் என முடிவு செய்த டி.ஆர்.டி.ஓ., கோவை பாரதியார் பல்கலையுடன் 1998 ஏப்.,18ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அறிவியல் ஆலோசகராக இருந்த அப்துல்கலாம், துணைவேந்தர் இளங்கோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி, பயோ சென்சார், தின் ப்லிம் டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி அன்ட் பயோ டெக்னாலஜி, பயோ மெடிக்கல் டெக்னாலஜி உட்பட ஒன்பது முக்கிய துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு தேவையான நிதியுதவியை டி.ஆர்.டி.ஓ., ஒதுக்கீடு செய்தது. இதுவரை பாரதியார் பல்கலைக்கு 35 ஆராய்ச்சி திட்டங்கள் கிடைத்துள்ளன. 30 திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஐந்து திட்டங்களில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இத்திட்டங்களுக்கான மொத்த மதிப்பு 2.15 கோடி ரூபாய். முக்கிய ஆராய்ச்சி திட்ட விபரம் போலோ மீட்டர் சென்சார்: எதிரிகள் நடமாட்டத்தை இரவில் கண்காணிக்க ‘போலோ மீட்டர்’  என்ற கருவியை ராணுவ வீரர்கள் பயன்படுத்துகின்றனர். இக்கருவி ‘நைட் விஷன் கேமரா’ என்றும் கூறப்படுகிறது. இக்கருவியில் ஒளியின்றி போட்டோ, வீடியோ எடுக்க முடியும். இக்கருவி, எதிரிகளின் உடலில் இருந்து வெளிப்படும் வெப்பத்தை உணர்ந்து செயல்படும். வெப்பத்தை உணர்வதற்காக கருவியில் நவீன ‘சென்சார்’ பொருத்தப்பட்டுள்ளது. இந்த சென்சாரை கண்டுபிடித்துள்ளது பாரதியார் பல்கலை. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கு போலோ மீட்டரை சப்ளை செய்து வருகிறது அமெரிக்கா. பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியபின், இந்தியாவுக்கு இக்கருவி சப்ளை செய்யப்படவில்லை. இதிலுள்ள முக்கிய பாகம் வெப்பத்தை உணரும் சென்சார். பாரதியார் பல்கலையில் கண்டுபிடித்துள்ள சென்சார், அதிக சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது. இந்த சென்சாரை, பாரதியார் பல்கலையின் இயற்பியல் துறை கண்டுபிடித்துள்ளது. உப்புநீரை குடிநீராக்கும் நுண்ணுயிரி: சில பகுதிகளில் கிடைக்கும் நீரில், நைட்ரேட் அளவு அதிகமாக இருப்பதால், நீர் உப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். இந்நீரிலுள்ள உப்புத்தன்மையை நீக்கும் நுண்ணுயிரியை, பாரதியார் பல்கலை கண்டுபிடித்துள்ளது. இந்த நுண்ணுயிரியை உப்புத்தன்மை கொண்ட நீரில் கலந்தால், நைட்ரேட் உறிஞ்சப்பட்டு உப்புநீர், குடிநீராக மாறிவிடும். இந்த நுண்ணுயிரியை பாரதியார் பல்கலை சுற்றுப்புற அறிவியல் துறை, உயிர் தொழில்நுட்பத்துறை பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். பயோ சென்சார்: உடலிலே இருக்கும் ரத்தத்தில் குளுக்கோஸ் (சர்க்கரை) அளவை, உடனே கண்டறியும் பயோ சென்சார், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை சில நிமிடங்களில் கண்டறிய முடியும். இந்த சென்சார், சந்தையில் கிடைக்கும் கருவிகளில் பொருத்தப்பட்டுள்ளதை விட, நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. தெர்மோ ஸ்டேபிள் கோலினெஸ்டரேஸ் என்ஸைம்: வெளிநாடுகளில் இருந்து விலைக்கு வாங்கப்பட்டு வந்த இந்த நொதி (என்ஸைம்), பாரதியார் பல்கலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித ரத்தத்தில் உள்ள சீரத்தில் கோலினெஸ்டரேஸ் என்ஸைம் காணப்படுகிறது. போர்க்காலத்தில் எதிரி நாட்டைச் சேர்ந்த ராணுவம், விஷ வாயு கொண்ட ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தக்கூடும். அந்த வாயுவை, இந்த என்ஸைம் மூலம் உடனே கண்டறிய முடியும். இந்த நொதி, பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் தோன்றும். விஷ வாயு இருக்கும் பகுதியில் கொண்டு வைத்தால், மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும். ராணுவத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கப்போகும் இந்த நொதியை, பாரதியார் பல்கலையின் பயோ டெக்னாலஜி துறை கண்டுபிடித்துள்ளது. கொசுவை அழிக்க மருந்து: பேசில்லஸ் துரின்சியஸ் என்ற பாக்டீரியாவில் உள்ள ஆல்பா, பீட்டா என்டோ டாக்சினை (நச்சு) எடுத்து, அதனுடன் சில தாவரங்களின் சாறை சேர்த்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத கொசு மருந்தை தயாரித்துள்ளது பாரதியார் பல்கலையின் விலங்கியல் துறை. தண்ணீர் தேங்கி நிற்குமிடம், சாக்கடை நீர் தேங்கியிருக்கும் பகுதியில், இந்த மருந்தை தெளித்தால், அதன் இனப்பெருக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, கொசுக்கள் கொல்லப்படும். இந்த மருந்தால், சுற்றுப்புற சூழல் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. காப்புரிமை:  இந்த கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை என்பது மிக அவசியம். இதற்காக டி.ஆர்.டி.ஓ., மூலம் காப்புரிமை கேட்டு விண்ணப்பித்து இரு ஆண்டுகள் ஆகியும் இதுவரை காப்புரிமை கிடைக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்