உள்ளூர் செய்திகள்

‘தொழில்முனைவோரைப் போல் விஞ்ஞானிகள் செயல்பட வேண்டும்’

கோவை: “விஞ்ஞானிகள், தொழில்முனைவோரைப் போல் செயல்பட வேண்டும்,” என, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக உதவி இயக்குனர் திவாரி பேசினார். இந்தியா முழுவதும் 24 மாநில வேளாண் பல்கலை, நான்கு வேளாண் ஆராய்ச்சி கழக நிறுவனங்களில், ‘வேளாண் கல்வியின் நிலைப்பாடு மற்றும் வளப்பாடு’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், ‘உயிரி எரிபொருளின் உயர்வாக்குதல் மற்றும் பிரபலப்படுத்துதல்’ திட்டம், முதலாண்டில் ஒரு கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆண்டுக்கு 69 லட்சம் ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். குறிப்பிட்ட பல்கலையில் எந்த துறை சிறப்பாக செயல்படுகிறதோ, அத்துறை சம்பந்தமான ஆராய்ச்சி அதிகளவில் மேற்கொள்ளப்படும். அதற்கு ‘ஒரு துறையில் சிறப்பு நிலை அடைதல் திட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இரண்டாம்  ஆண்டு துவக்க விழா, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் நவ., 7ம் தேதி நடந்தது. இதில் டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக இணை இயக்குனர் எஸ்.பி. திவாரி பேசுகையில், “சில பகுதிகளில் ஒரு துறையில் சிறப்பு நிலை அடைதல் திட்டத்தின் நோக்கம் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும், அங்குள்ள திறனைக் கண்டறிந்து அதற்கேற்ப ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். இத்திட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும்,” என்றார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக உதவி இயக்குனர் ஜி.சி.திவாரி பேசுகையில், “ஆராய்ச்சி திட்டத்திலுள்ள விஞ்ஞானிகள், தொழில்முனைவோரைப் போல செயல்பட வேண்டும். இதுதொடர்ந்து நடத்தப்படவுள்ள திட்டம். தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கல்வி நிறுவனங்களுடன் விஞ்ஞானிகள் கலந்தாய்வு செய்வது அவசியம். திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளிடம் இருந்து திரட்டப்படுகின்றன,” என்றார். இக்கூட்டத்தில் வேளாண் பொறியியல் கல்லூரி ‘டீன்’ சம்பத்ராஜன், பேராசிரியர் பரமாத்மா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்