உள்ளூர் செய்திகள்

கல்வியை சமூக வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டுகோள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த 16வது பட்டமளிப்பு விழாவில் மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர் ச.பாஸ்கரன் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். அவரது பட்டமளிப்பு உரையின் முக்கிய அம்சங்கள்: பட்டம் பெறுபவர்கள் மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோரும் சந்தோஷமடையும் தினம் இது. ஆனால் சந்தோஷத்தையும் கடந்து சமூகத்தையும் மனிதநேயத்தையும் பாதிக்கும் விஷயங்களையும் அலசிப்பார்க்க வேண்டிய தருணமாகும். சிக்கலான விஷயங்களில் விவாதங்களின் மூலம்தான் தீர்வு கண்டுள்ளனர். நம் சமுதாயமே விவாதத்தின் மூலம் வளர்ச்சிபெற்றது என்பதை நோபல் பரிசு பெற்ற மேதை அமர்த்தியாசென் குறிப்பிட்டுள்ளார். மன்னர்கள் அசோகரும், அக்பரும் கூட இத்தகைய நல் விவாதங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். சமூகத்தின் தீமைகள், கொடுமைகளை வேரறுத்த பெரியார், அண்ணாதுரை போன்றோர் விவாதங்களின் மூலம்தான் அவற்றை அடைந்தனர்.   சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் உலகமயமாக்கல் பாதிக்கிறது என ஜப்பானில் யுனெஸ்கோ நிறுவன இயக்குநர் கூறியுள்ளார். தொழில்நுட்பம் அன்றாட வாழ்வில் அங்கமாக மாறிவிட்டசூழலில் அறிவியல் முன்னேற்றங்களை எப்படி மனித வள மேம்பாட்டிற்கு பயன்படுத்தி வெற்றிகாண முடியும் என்பதுதான். நாடு என்ன செய்தது என கேட்பதை விட நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என அமெரிக்க ஜனாதிபதி கென்னடி என கூறியதுநினைவுக்கு வருகிறது.   அண்மையில் ஒரு ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ டிரைவரிடம் பேசியபடி சென்றேன். அந்த ஆட்டோ டிரைவர் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஆனால் தினம்தினம் 125 ரூபாய் சம்பளத்திற்காக ஆட்டோ ஓட்டுவதை அறிந்தேன். தற்போது சிறந்த கல்வி பெற காரணமாக இருந்த உங்களது பெற்றோர், சமுதாயம், நாடு என அனைவருக்கும் நீங்கள் உங்களது திறமையை பயன்படுத்தி கைம்மாறு செய்ய வேண்டும். உங்களுக்குள் பொதிந்துகிடக்கும் ஆற்றலை பயன்படுத்தி பணிகள் புரியுங்கள் இவ்வாறு ச.பாஸ்கரன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்