உள்ளூர் செய்திகள்

கிறிஸ்தவர் இடஒதுக்கீடு ரத்து: நிறைவேறியது மசோதா

சென்னை: “தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாமென கிறிஸ்தவ பிரதிநிதிகள் கேட்டதால் தான் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது,” என்று சட்ட அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் நவ. 14ம் தேதி நடந்த விவாதம்:சண்முகம் (அ.தி.மு.க.,): சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிக்க கமிஷன் அமைத்தார் ஜெயலலிதா. ஆட்சி மாறியதும், அந்த கமிஷனை கலைத்துவிட்டு, நீதிபதி ஜனார்த்தனத்தை நியமித்து பரிந்துரை பெற்று, ஏற்கனவே இருந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினீர்கள். தற்போது கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்காக சட்டத்தை திரும்ப பெறுகிறீர்கள். மற்ற மாவட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? முறையாக விசாரிக்காமல் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. மதவாத இடஒதுக்கீடுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தேர்தலுக்காக சிறுபான்மையினர் ஓட்டுப் பெற இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்துல் பாசித் (தி.மு.க.,): ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளித்தபோது, அதை எதிர்த்தவர் ஜெயலலிதா. கிறிஸ்தவர்களில் பல வகுப்புகள் உள்ளதால், அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த இடஒதுக்கீடு நீடிக்குமா என்று கேட்பதன் மூலம் இதை ஆதரிக்கிறார்களா? எதிர்க்கிறார்களா? சண்முகம்: இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. முழு சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கோருகிறோம். லீமா ரோஸ் (மார்க்சிஸ்ட்): கிறிஸ்தவர்களுக்கு இந்த ஒதுக்கீட்டால் பாதிப்பு ஏற்படுமென முதலில் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் தான். மணி (பா.ம.க.,): தலித் கிறிஸ்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வேண்டும். அமைச்சர் பொன்முடி: 2001 மக்கள் தொகை அடிப்படையில், கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவசரமாக சட்டம் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தனர். ஆனால், அதை கோர்ட் நிராகரித்தது. இந்த ஆட்சியில் முறையான குழு அமைத்து, அவர்களது பரிந்துரைப்படி நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அமைச்சர் துரைமுருகன்: 2001 மக்கள் தொகைப்படி 6.26 கோடி பேரில், 36 லட்சம் முஸ்லிம்கள் இருந்தனர். இது 5.5 சதவீதம். 37.85 லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். இது 6.06 லட்சம். கிறிஸ்தவர்கள் தனியாக இடஒதுக் கீடு கேட்டதால் கொடுத்தோம். அதை அமல்படுத்தியபோது, இருப்பதும் போய்விடும் எனக் கருதி மனுக்கள் அளித்தனர். அனைத்து மாவட்ட பேராயர்களை அழைத்துப் பேசி ரத்து செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களிடம் இருந்து புகார் இல்லை. இவ்வாறு நடந்த விவாதத்துக்கு பின், மசோதா நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்