ஐ.பி.எஸ்., அகடமி இயக்குனராக விஜயகுமார் நியமனம்
சென்னை: தேசிய ஐ.பி.எஸ்., அகடமியின் இயக்குனராக, டி.ஜி.பி., விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக போலீஸ் பயிற்சித்துறை டி.ஜி.பி.,யாக இருந்த விஜயகுமார், மத்திய அரசு பணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். அதனையடுத்து, தேசிய ஐ.பி.எஸ்., அகடமியின் இயக்குனராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிச. 1ம் தேதி காலை ஐதராபாத்தில் உள்ள ஐ.பி.எஸ்., அகடமியின் இயக்குனராக பொறுப்பேற்கிறார். சென்னை அசோக் நகரில் உள்ள போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் நிருபர்களை சந்தித்த விஜயகுமார் கூறியதாவது: ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான நான், 1975ம் ஆண்டில் ஐதராபாத்தில் பயிற்சி பெற்றேன். இந்தியாவில் தேர்வாகும் ஐ.பி. எஸ்., அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் பாரம்பரியம் மிக்க அகடமியின் இயக்குனராவது பெருமையான விஷயம். மும்பை பயங்கரவாத சம்பவத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலியானது சோகமான சம்பவம். இந்தியாவில் ஊடுருவும் பயங்கரவாதிகளை எதிர்கொள்வது குறித்து பல திட்டங்களை வைத்துள்ளேன். அதை சம்பந்தப்பட்ட துறைக்கு தெரியப்படுத்துவேன். தமிழக பணியில் இருந்து ஒதுங்குவதாக சிலர் கூறுகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கும் மேல் இன்னும் பணியாற்றும் வாய்ப்பு உள்ளது. அதனால், தமிழகத்திற்கு எப்போது அழைக்கிறார்களோ அப்போது வந்து விடுவேன்.