சர்ச்சைக்குள்ளான காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பதவி
காந்திகிராமம்: காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பதவி சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. காந்திகிராம பல்கலை துணைவேந்தராக இருந்த ராமசாமி. அரசு உத்தரவின்படி, செப்.9ல் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் புல தலைவர் ஜோசப் துரைராஜ் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இப்பல்கலை வேளாண்மை மற்றும் கால்நடைகள் பராமரிப்பு புல தலைவர் செந்திவேல், மதுரை ஐகோர்ட்டில் இந்த நியமனத்திற்கு தடையுத்தரவு பெற்றார். இதனால் துணைவேந்தர் பதவி மீண்டும் காலியானது. நேற்று மதியம்,செந்திவேல், துணைவேந்தராக பதவியேற்றார். இதற்கு உடன்படாத பதிவாளர் நாராயணசாமி, இதர புல தலைவர்கள், துறை தலைவர்களுடன் நீண்ட நேரம் ரகசிய ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, "செந்திவேல் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என கோர்ட் உத்தரவிடவில்லை. அவர் தன்னிச்சையாக துணைவேந்தராக பதவியேற்றது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு தகவல் தரப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் உத்தரவின்படி மேல்நடவடிக்கை அமையும்" என்றார். செந்திவேல் கூறுகையில், "கோர்ட் தடையுத்தரவின்படி, ஜோசப் துரைராஜ்,பொறுப்பு துணைவேந்தர் பதவியில் இருந்து விலகியதும், அந்த பதவி காலியானது. பல்கலை நிர்வாக விதிமுறைகளின்படி,மூத்த புல தலைவரான நான், பொறுப்பு துணைவேந்தராக பதவியேற்றுள்ளேன். நிர்வாகத்தை நடத்த ஒத்துழைப்பு தரமறுத்தால், நாராயணசாமி பதிவாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்" என்றார்.