குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் டானிக் பால்சோறு
ஒவ்வொரு பகுதிக்கும், அங்கு நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப உணவு பழக்கம் உண்டு. இவ்வகை உணவினை கலாச்சார உணவு என்பார்கள். கரிசல் மண் கொண்ட கந்தக பூமி, சுட்டெரிக்கும் சூரிய கதிர்களின், வெயில் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வகையில், விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டையில் வசிக்கும் பெரும்பாலான மக்களின், இரவு உணவாக "பால்சோறு பக்கோடா" இடம் பெறுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் அரிசி உணவு என்பது கேள்விக்குறியாக இருந்தது. வசதி படைத்தவர்கள் மட்டுமே அரிசி உணவு சாப்பிட்டு வந்தனர். கிராம பகுதியை சேர்ந்த பலர் கம்பு, கேழ்வரகு உணவையே சாப்பிட்டு வந்தனர். அந்த காலத்தில் 20க்கும் மேற்பட்டோர் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். காலையில் சமைத்த உணவையே, இரவு வரை பயன்படுத்தி வந்தனர். இரவில் சாதம் சூடாக இருக்க வேண்டும் என்பதற்காக, சுட வைக்கப்பட்ட பாலை சாதத்தில் பிசைந்து சாப்பிடும் மரபை கடைபிடித்தனர். இதற்கு "சைடிஸ்" ஆக பக்கோடா வையும் பயன்படுத்தினர். சிறு குழந்தைகளுக்கு இரவில் நிலவை காட்டி பால் சோறு ஊட்டுவார்கள் தாய்மார்கள். அமுதமாக திகழும் இந்த உணவினை, பெரியவர்களும், வயதானவர்களும், இன்றும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அலுவலகம், பேக்டரிகளில் வேலை செய்யும் ஊழியர் முதல், உரிமையாளர்கள் வரை, தினமும் வீடு திரும்பும் போது, "ஸ்நாக்ஸ்" கடையில், தேவைக்கு ஏற்ப பக்கோடா வாங்குகின்றனர். வீட்டில் தயார் செய்திருக்கும், இரவு உணவான பால்சோற்றில், மொறு, மொறு என்ற பக்கோடாவை "சைடிஸ்"&' ஆக சேர்த்து கொள்கின்றனர். இப்பகுதிகளில் நடக்கும் அனைத்து சுப நிகழ்ச்சிகள், உணவுடன் கூடிய சிறு விருந்து அனைத்திலும் புரோட்டா, இட்லி, தோசை, காளான் குருமா என, இறுதியில் பால்சோறு பக்கோடா வழங்கி விருந்தை அமர்களப்படுத்தி விடுவார்கள். வயிறு புடைக்க பலவகை உணவுகளை சாப்பிட்டாலும், இறுதி மெனுவாக பால்சோறு சாப்பிட்டுதான் விருந்தை நிறைவு செய்கிறார்கள். அந்தளவிற்கு அதன் ருசியும், சுவையும் கவர்ந்து இழுக்கும். பால்சோறு "நாவில் வழுக்கி, வயிற்றை குளிர வைக்கும்" சுவையான உணவு. குறிப்பாக, சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதி வணிகர்கள் வீடுகளில், இரவு நேரத்தில் இது தான் உணவு. ஏன் சிவகாசி உள்ளிட்ட பெரும் ஓட்டல்களில் பால்சோறு பக்கோடாவும், மெனு கார்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இரவு தூக்கத்துக்கு "டானிக்" பிரபல சமையல் மாஸ்டர் சிவகாசி பரமேஸ்வரன், பால்சோறு தயாரிப்பு பற்றி கூறுகையில், "20 பேருக்கு, பால்சோறு தயாரிக்க, ஒரு கிலோ அரிசி, 3 லிட்டர் பால், 150 கிராம் வெண்ணை, 2 மாதுளம் பழம், தேவையான உப்பு எடுத்துகொள்ள வேண்டும். கொதிநீரில் அரிசியை போட்டு, நன்கு குலையும் வரை வேக வைத்து வடித்து கொள்ள வேண்டும். சாப்பாட்டை கரண்டியால் புரட்டி போட்டு, நன்கு காய்ச்சிய பாலை ஊற்றி, கிளற வேண்டும். அதனோடு, வெண்ணையை சேர்க்கவும். பின்னர் மாதுளம் பழத்தை உரித்து முத்துக்களை நீரில் கழுவி பால் சாதத்தில் சேர்த்து கொள்ளலாம். விரும்பினால், திராட்சையும் சேர்க்கலாம். இதன் சுவை தூக்கலாக இருக்கும். இந்த உணவை, 2 வயது குழந்தை முதல் 90 வயது முதியவர் வரை சாப்பிடலாம். மற்ற வகை உணவுபோல் தூங்கும் போது நெஞ்சு கரிப்பு, எரிச்சல் இருக்காது; நல்ல தூக்கம் வரும். உடலை இலகுவாக வைக்க நல்ல "டானிக்" போன்ற உணவு" என்றார். பாதிப்பு இல்லாத உணவு சிவகாசி பானுபரணி, "சிவகாசி, விருதுநகர், வணிகர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அந்த காலங்களில் இருந்தே, வணிகர்கள் நாள் முழுவதும் கடைகளில் உட்கார்ந்தே, பணி செய்பவர்கள். அதனால், உடலில் சூடு அதிகரிக்கும். இச் சூட்டை குறைக்க, தலைமுறை, தலைமுறையாக பால்சோறு, பக்கோடாவை இரவில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். எங்களுக்கும் இரவு உணவு, பால்சோறு பக்கோடாதான். உடலுக்கு பாதிப்பு இல்லாத உணவு," என்றார். கூட்டு குடும்பத்தை சேர்ந்த விருதுநகர் சி.குமரேசன் கூறுகையில், "இரவில் "பால்சோறு பக்கோடா" சாப்பிடுவதால், வயிறுக்கு உபாதை இல்லாமல், குளிர்ச்சியாக உள்ளது. நடு இரவில் தண்ணீர் தாகம் எடுப்பது கிடையாது. நிம்மதியான உறக்கம் இருப்பதால், காலையில் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். விருதுநகரிலிருந்து வேலைக்காக, கல்விக்காக புலம் பெயர்ந்து, வேறு இடத்தில் வசிப்பவர்களும், இந்த உணவை இரவு நேரத்தில், சாப்பிட்டு வருகின்றனர். திருமண விசேஷங்களில், முந்தைய நாள் இரவு "பால்சோறு பக்கோடா" தான் சிறப்பு உணவு," என்றார்.