‘வரதட்சணை கொடுமை ஒழிய கல்வியில் முன்னேறுங்கள்’
செங்கல்பட்டு: வரதட்சணைக் கொடுமை, ஜாதி கொடுமை ஒழிய வேண்டும் என்றால் கல்வியில் பெண்கள் முன்னேற வேண்டும் என தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். செங்கல்பட்டில் தினமலர் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடந்தது. தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி அரசு தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளிடம் அவர்களின் வெற்றிக்கான காரணத்தைக் கேட்டபோது அவர்கள் தினமும் பள்ளி நேரம் தவிர 6 மணி நேரம் படித்ததாக தெரிவித்தனர். அதுபோல் படித்தால் நீங்களும் நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் பெறலாம். உங்கள் வாழ்க்கையில் பிளஸ் 2 தேர்வு திருப்புமுனை. இரண்டு மதிப்பெண்கள் கூடுதலாகப் பெற்றாலும் அது வாழ்க்கையின் வெற்றிக்கு உதவும். இன்ஜினியரிங் போன்ற படிப்புகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் அவசியம். படித்துவிட்டு வேலைக்கு போகவும், வெளிநாடு செல்லவும் ஆங்கில அறிவு அவசியம். அதற்கு நல்ல நூல்களைப் படிக்க வேண்டும். ஆங்கில அகராதியை அருகில் வைத்துக் கொண்டு ஆங்கில வார்த்தைகளுக்கு பொருள் தெரிந்து படிக்கவும். திரும்ப திரும்ப படிக்கும்போது தானாகவே ஆங்கில அறிவு வளரும். நகர்ப்புற மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. நகர்ப்புற மாணவர்கள் போல் கிராமப்புற மாணவர்களுக்கும் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் குறைந்தது ஐந்து மதிப்பெண்கள் கூடுதலாக பெற்றால் கூட வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இங்கு பெண்கள் அதிக அளவில் வந்துள்ளதைக் காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது. வரதட்சணைக் கொடுமை, ஜாதி கொடுமை ஒழிய வேண்டும் என்றால் கல்வியில் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்கள் கல்விக்காக அரசு ஏராளமான சலுகைகளை வழங்குகிறது. பெண்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற வேண்டும். வளம் பெற வேண்டும் என்பதற்காக தினமலர் சார்பில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியை நடத்துகிறோம். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கூறும் குறிப்புகளை கவனமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அதை பின்பற்றி படித்தால் நீங்கள் குறைந்தது 100க்கு 80 மதிப் பெண்கள் பெறலாம். நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.