கிணற்றில் குதித்ததாக நாடகம்: மாணவனுக்கு எச்சரிக்கை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தந்தை கண்டித்ததால், கிணற்றில் குதித்து தற்கொலை நாடகமாடிய மாணவனை தீயணைப்பு துறை அதிகாரிகள் எச்சரித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் கோட்டை பகுதியை சேர்ந்த அக்பர்பாஷா. கார் டிரைவர். இவரது மகன் பாருக்பாஷா, 15. இவர், அதே பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். பாருக் பாஷாவிடம் ஒழுங்காக பள்ளிக்கு செல்லுமாறு, அவரது தந்தை அக்பர்பாஷா நேற்று முன்தினம் இரவு கண்டித்துள்ளார். இதனால், வீட்டில் இருந்து பாரூக்பாஷா கோபமாக வெளியே சென்றுள்ளார். அப்போது, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதிக்கும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த அக்பர்பாஷா, தனது மகன்தான் கிணற்றின் குதித்துவிட்டான் என கருதி ஓடினார். இதுகுறித்து, உடனடியாக வந்தவாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையறிந்த, அக்பர்பாஷாவின் உறவினர் ஒருவர், உங்கள் மகன் அருகே உள்ள துவக்கப்பள்ளி அருகே இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அங்கு சென்ற அக்பர் பாஷா அவனை பிடித்து வந்தார். அவனிடம், தீயணைப்பு துறை வீரர்கள் விசாரித்ததில், தந்தை திட்டியதால் கல், செருப்பை கிணற்றில் வீசிவிட்டு, தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, பாரூக்பாஷா மற்றும் அவரது தந்தையை தீயணைப்பு நிலைய அலுவலர் எச்சரித்து அங்கிருந்து சென்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.