காலியிடங்களால் திணறும் அரசு பொறியியல் கல்லூரி
காரைக்குடி: காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு இன்ஜி. கல்லூரியில், ஓய்வு பெறும் ஆசிரியர், பணியாளருக்கு பதில், புதிய பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு இன்ஜி. கல்லூரி 1952-ல் தொடங்கப்பட்டது. 2007-ம் ஆண்டு கிரேடு 1 (சிறந்த கல்லூரி) தரத்துக்கு உயர்ந்தது. 2009-10-ம் ஆண்டில் தன்னாட்சி நிர்வாகமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் மெக்கானிக்கல், எலக்ட்ரீசியன், கம்ப்யூட்டர் சாப்ட்வேர், சிவில், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். எம்.இ. சிவில் 25, மெக்கானிக்கல் 25, எலக்ட்ரானிக்ஸ் 25, எம்.சி.ஏ.யில் 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இம்மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாமலும், தொழில் நுட்ப பணியாளர்கள் இல்லாத நிலையிலும், கல்வி தரம் குன்றி வருவதாக பெற்றோர், மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 119 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், 80 பேரே பணியாற்றி வருகின்றனர். மெக்கானிக்கல் பணிமனையில் 59 தொழில்நுட்ப பணியாளர்களுக்கு 7 பேரும், ஆய்வகத்தில் 11 பேருக்கு 5 பேரும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 15 பேருக்கு 3 பேரும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 15 பேருக்கு ஏழு பேரும், கம்ப்யூட்டர் பிரிவில் 10 பேருக்கு 2 பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். தொழில்நுட்ப வல்லுனர் இல்லாமல், உலக வங்கி நிதியுதவியுடன் வாங்கப்படும், புது இயந்திரங்களை, கையாள்வதில் காலதாமதம் மற்றும் தேக்க நிலை நிலவுகிறது. ஏற்கனவே பற்றாக்குறை உள்ள நிலையில், புதிதாக தொடங்கப்படும் இன்ஜி. கல்லூரிக்கு இங்கிருந்தே ஆசிரியர்கள் மாற்று பணியில் செல்கின்றனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் மேலும் பாதிக்கப்பட்டு வருகிறது. துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால், கல்லூரி வளாகத்தை சுற்றியுள்ள புல்வெளிகள் அகற்றப்படாமல், விஷ பூச்சிகள் வசிப்பிடமாக மாறி வருகிறது. இரண்டாம் ஆண்டு கவுன்சிலிங்கிற்கு வருபவர்கள், வரிசையில் நிற்கும்போது, மூக்கை பொத்திக்கொண்டு நிற்கும் நிலை உள்ளது. தொழில்நுட்ப கல்லூரி இயக்ககம் தேவையான ஆசிரியர்கள், பணியாளர்களை நியமித்து, மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட வழி வகுக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு பெற்றோர், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.