குறைகள் பற்றிய சிந்தனையை கைவிட்டால் ஏற்றம்
பந்தலூர்: "நம்மிடம் உள்ள ஒரு குறைகளை பற்றி திரும்ப, திரும்ப சிந்தனை செய்வதை கைவிட்டாலே, வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்" என, தெரிவிக்கப்பட்டது. மாநில பள்ளி கல்வித்துறையின், நடமாடும் ஆலோசனை மையத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. கோவை மண்டலத்திற்கு உட்பட்ட நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவியருக்கு வழங்கப்படும் இந்த ஆலோசனைகள், கூடலூர் கல்வி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் சித்தானந்த் வரவேற்றார். ஆசிரியர் தண்டபாணி முன்னிலை வகித்தார். கோவை மண்டல உளவியல் ஆலோசகர் அருள்வடிவு, மாணவர்களுக்கு பயிற்சி அளித்து பேசியதாவது: நாம் நாள்தோறும் பார்க்கும் காட்சிகளை, உணர்வுகளை மனதில் பதிய வைக்கும்போது, தேவையானதை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். மாணவ பருவத்தில் நல்ல எண்ணங்களை வளர்க்காவிட்டால் எதிர்காலத்தில் பிரச்னைகள் அதிகரிக்கும். ஆளுமை திறனை மேம்படுத்திக்கொள்ளவும், மனதை அலைபாய விடாமல் தடுத்து, நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்வது அவசியம். நம்மிடம் உள்ள ஒரு குறையை திரும்ப, திரும்ப சிந்தனை செய்வதை கைவிட்டாலே, வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். நகம் கடிக்கும் பழக்கத்தால், எந்த காரியத்திலும் முன்னேற முடியாத குழப்பமான சூழ்நிலை ஏற்படும். அதிகாலையில் எழுந்து பல் துலக்கி, முகத்தை கழுவிய பின்னர் படிக்க துவங்கினால், புத்துணர்வு கூடிய மனப்பாட சக்தி அதிகரிக்கும். இவ்வாறு அருள்வடிவு பேசினார். தொடர்ந்து, மன அழுத்தம், கோபம், மன சோர்வு, கவன குறைபாடு போன்றவற்றிலிருந்து விடுபடுவது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆசிரியை ஜாய்ஸ்ஜெனிபர் நன்றி கூறினார். மாவட்டம் முழுவதும் இந்த பயிற்சிகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.