பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏற்பாடு
ஈரோடு: ஈரோடு கோபி வருவாய் கல்வி மாவட்டங்களில் மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் பள்ளிகளில் நடத்துவது குறித்து ஜூலை இரண்டு மற்றும் மூன்றாம் தேதியில் முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சித்தையா கூறியதாவது: ஈரோடு வருவாய் மாவட்டத்தில் நான்கு, கோபி வருவாய் மாவட்டத்தில் நான்கு என மொத்தம் ஈரோடு கல்வி மாவட்டத்தில் எட்டு குறுமைய அளவிலான போட்டிகளை பள்ளி மாணவ, மாணவியருக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. போட்டிகளை நடத்துவது குறித்த கலந்தாலோசனை செய்வற்கான பொதுக்குழு கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் இன்றும் கோபியில் நாளையும் நடக்க உள்ளது. வாலிபால், பேஸ்கட்பால், கபடி, ஹாக்கி, கோகோ உள்ளிட்ட குறுமைய போட்டிகள், ரன்னிங், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகளும், மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.