உள்ளூர் செய்திகள்

உடற்கல்வி ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் துவங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்பயிற்சி முகாமில், விளையாட்டு விதிமுறைகள், மாணவ, மாணவியருக்கு விளையாட்டுகளை கற்பித்தல், போட்டியில் வெற்றி பெறுவதற்கான நுணுக்கங்கள் குறித்து கற்பிக்கப்படும். நடப்பாண்டுக்கான புத்தாக்க பயிற்சி முகாம், குமார் நகர் ஏ.வி.பி., பள்ளியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமலிங்கம் தலைமையில் துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் இம்முகாமில், மாவட்ட உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். நேற்றைய முகாமில், ராஜா, பிரசன்னா ஆகியோர் செஸ் போட்டி குறித்தும், ரவிச்சந்திரன், பாக்ஸிங் குறித்தும், துரைபாண்டியன் ஜூடோ குறித்தும், பிரகாஷ் பீச் வாலிபால் குறித்தும் விளக்கினர். போட்டியில் வெற்றி பெறுவதற்கான, இறுதி கட்ட நடவடிக்கை குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இன்று நடக்கும் முகாமில், ரவிச்சந்திரன் சிலம்பம் குறித்தும், ஜான்சிலிம் வாள் சண்டை குறித்தும், ராஜா, சுதீஷ் ஆகியோர் நீச்சல் குறித்தும் விளக்க உள்ளனர். அதேபோல், முரளி, பாலகிருஷ்ணன் ஆகியோர் டேக்வாண்டோ குறித்தும் எடுத்துரைப்பர். இதர விளையாட்டுக்கான விதிமுறைகள், நாளை (நவ., 1) நடைபெறும் பயிற்சி முகாமில் விளக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்