அடிப்படை வசதிகள் இல்லாமையால் மாணவர்கள் சிரமம்
எர்ணாவூர்: எர்ணாவூர் ஆல் இந்தியா ரேடியோ நகர் ஆரம்ப பள்ளிக்கு, கழிப்பறை இல்லாததால், மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். எர்ணாவூர் ஆல் இந்தியா ரேடியோ நகரில், ஆரம்ப பள்ளி உள்ளது. இரண்டு ஆசிரியர்கள் பணிபுரியும் இந்த பள்ளியில், 25 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆரம்ப பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு, மற்றொரு பள்ளியில் சத்துணவு சமைத்து, எடுத்து வரப்படுகிறது. பெற்றோர் தயக்கம் மேலும், பள்ளியில் கழிப்பறை இல்லை. அடிப்படை வசதி இல்லாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். முன், 50 பேர் படித்த பள்ளியில், தற்போது எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. வரும் ஆண்டுகளில் இன்னும் குறைவதற்குள், தேவையான அடிப்படை வசதிகளை, கல்வி, மாநகராட்சி துறை அதிகாரிகள் செய்து தர வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியை கூறியதாவது: இப்பள்ளி, முன்பு சுனாமி குடியிருப்பு பகுதியில், கழிப்பறை, சமையலறை கொண்ட கட்டடத்தில் செயல்பட்டது. மாநகராட்சியிடம் கோரிக்கை அந்த இடமே மாணவ, மாணவியருக்கு போதுமானதாக இருந்தது. சுனாமி குடியிருப்புகள், பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதனால், தற்போது ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட அறைக்கு பள்ளியை மாற்றிவிட்டனர். இங்கு கழிப்பறை வசதி இல்லாததால், சிறுவர் சிறுமிகள் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். மாநகராட்சி அதிகாரியிடம், கழிப்பறை கட்டி தரும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.