பள்ளி வளாகத்தில் அச்சத்துடன் நடமாடும் குழந்தைகள்
பெ.நா.பாளையம்: காளிபாளையம் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில், பாதி இடித்து விடப்பட்ட சமையல் கூடம் அருகே பள்ளி குழந்தைகள் அச்சத்துடன் நடமாடி வருகிறார்கள். கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையம் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை செயல்படுகின்றன. இதில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். வளாகத்திலேயே பால்வாடி மையமும் இயங்குகிறது. ஏற்கனவே, இங்கிருந்த சத்துணவு மையத்துக்கான சமையல் கூடம் பழுதடைந்து, இடியும் நிலையில் இருந்ததால், அதற்கு பதிலாக புதிய சமையல் கூடம் கட்டப்பட்டது. அபாயகரமான நிலையில் இருந்த பழைய சமையல் கூடம், கடந்த வாரம் பொக்லைன் இயந்திரத்தால் இடிக்கப்பட்டது. ஆனால், கட்டடத்தை முழுவதுமாக இடிக்காமல், பாதி மட்டுமே இடிக்கப்பட்டதால் மீதமுள்ள கட்டடம் எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது. இதனால், பள்ளியில் படிக்கும் குழந்தைகள், அப்பகுதியில் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். காளிபாளையம் நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகி அன்புசெல்வன் கூறுகையில், குழந்தைகள் கழிப்பிடம் செல்ல அபாயகரமான நிலையில் உள்ள இக்கட்டடத்தை கடந்துதான் செல்ல வேண்டும். பாதி இடிக்கப்பட்ட நிலை யில் உள்ள கட்டடத்தை அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன், முழுவதுமாக இடிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். வெள்ளமடை ஊராட்சி தலைவர் காந்திமதி வரதராஜன் கூறுகையில், "சத்துணவு கட்டடம், அரசு கட்டடம் என்பதால் அதை முழுவதுமாக இடிக்க உரிய அரசு அனுமதி பெற வேண்டும். இதற்காக, அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகளின் நலன் கருதி, பாதியில் இடிக்கப்பட்ட கட்டடத்தை முழுவதுமாக இடித்துத் தள்ள, அரசு அதிகாரிகளுடன் பேசி, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.