உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற வருமான சான்றிதழ்

உடுமலை: கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, வருமானச்சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, உடனடியாக சான்றிதழ் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசின் சார்பில் கல்வித்துறை மூலம், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் திறனாய்வுத் தேர்வு அடிப்படையில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெற்றாலும், அம்மாணவர்கள் உதவித்தொகை பெறுவது சிக்கலாகவே உள்ளது. வங்கிக்கணக்கின் மூலம் அரசின் சார்பில் நேரடியாக தொகை செலுத்தப்படுவதால், பள்ளிகளுக்கு எந்த விபரமும் தெரிவதில்லை.பல மாணவர்களுக்கு குறிப்பிட்ட விவரங்கள் முழுமையாக இல்லாததால், தேர்ச்சி பெற்றிருந்தாலும், உதவித்தொகை செலுத்தப்படாமல் அவர்களின் வங்கி கணக்குகள் நிராகரிக்கப்படுகின்றன. இதில் வருமானச்சான்றிதழ் அனுப்பப்படாமல் இருப்பதே விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்படுவதற்கு காரணமாக கல்வித்துறை அலுவலர்கள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட துறைகளிலும், வருமான சான்றிதழ் வழங்குவதற்கு நீண்ட காலம் அலைக்கழிக்கப்படுகின்றனர். பெற்றோரும் அதை தவிர மற்ற விவரங்களை மட்டுமே பள்ளிகளில் சமர்ப்பிக்கின்றனர்.தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: உதவித்தொகை வழங்குவதற்கு முக்கியமானது வருமான சான்றிதழ். அரசுத்துறைகளில் இச்சான்றிதழ் வழங்குவதற்கு தாமதப்படுத்துவதால், பள்ளிகளிலும் தாமதமாக சமர்ப்பிக்கின்றனர். பள்ளிகளிலேயே இச்சான்றிதழ் பெறுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், அதற்கான முழுமையான பணிகள் நடைமுறைபடுத்தப்படவில்லை. இச்சான்றிதழ் தாமதமாகும் மாணவர்களுக்கு, அறிவிப்பு சான்றிதழ் பெற்று தயாராக இருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொருளாதார வசதியின்மையால், பல பெற்றோர் அச்சான்றிதழையும் பெற முடியாமல் உள்ளனர். இதனால், இறுதியில் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதே தாமதமாக தெரிய வருவதால், குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு மறுமுறை உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாது. அரசு இதனை கருத்தில்கொண்டு, உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு விரைவில் இச்சான்றிதழ்களை வழங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்