உள்ளூர் செய்திகள்

நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு

திருப்பூர்: நம் மாவட்டத்தில் உள்ள, 148 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு, 1.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இன்னும் இரண்டு வாரங்களில், பள்ளிகளின் வங்கி கணக்கில், இத்தொகை செலுத்தப்படும். இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், ஏழை மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான, கல்வி கட்டண நிதியை, தமிழக அரசு வழங்குகிறது. 2013-14 மற்றும், 2014-15ம் கல்வியாண்டுக்கான நிதி, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 148 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு, ஒரு கோடியே, 12 லட்சத்து, 484 ரூபாய் கல்வி கட்டண நிதியாக, ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், இத்தொகை, அந்தந்த பள்ளி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நிதி ஒதுக்குவதற்காக, பள்ளிகள் பற்றிய விவரங்களை கேட்டபோது, நிதி வருமோ, வராதோ என்ற அலட்சியத்தில், சில பள்ளி நிர்வாகங்கள் முழுமையான தகவல்களை தரவில்லை. முதலில் அனுப்பிய அறிக்கையில் உள்ள தவறை திருத்தி தருமாறு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியது. அதன்பின், மாவட்டத்தில் உள்ள, 148 பள்ளிகளின் முழு விவரங்கள் மீண்டும் சேகரித்து, பட்டியலிட்டு அனுப்பப்பட்டது. இதேபோல், மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தில் இருந்து, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி கட்டணமும், மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்