தொழில் நுட்ப தேர்விற்கு விண்ணப்பிக்க அறிவுரை
புதுச்சேரி: ஓவியம், இசை, நடனம் உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சி.இ.ஒ.,ராமலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம் மற்றும் தையல் பிரிவுகளுக்கான அரசு தொழில்நுட்ப தேர்வுகள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடக்கிறது. இந்த தேர்வுகளை எழுத, தகுதியான தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வு எழுத விரும்புவோரிடமிருந்து கடந்த 14ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை நேரடியாக அணுகி, புகைப்படத்துடன் விண்ணப்பத்தை ஆன் லைன் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை 20ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக, நடனப்பிரிவு தேர்வு கீழ் நிலைக்கு ரூ. 57, மேல்நிலைக்கு ரூ. 62 செலுத்த வேண்டும். இதர இசை கூடுதல் செயல்முறை தேர்வுக்கு கீழ் நிலை ரூ. 27, மேல் நிலைக்கு ரூ. 37 மற்றும் பிற பாடங்களுக்கு கீழ்நிலைக்கு ரூ. 37, மேல்நிலைக்கு ரூ. 47 செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்துடன் ஆன் லைன் பதிவு கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.