அழகப்பா பல்கலை நுண்கலையில் இளங்கலை பட்டப்படிப்பு
காரைக்குடி: வரும் கல்வி ஆண்டில் நுண்கலையில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்படும் என காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் சுப்பையா கூறினார். பல்கலை நுண்கலை மையத்தில் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் விழாவில், அவர் பேசியதாவது: 2011ம் ஆண்டு நுண்கலை மையம் நிறுவப்பட்டது. இதன் மூலம் இசை, பாட்டு, வீணை மற்றும் வாய்ப்பாட்டு துறைகளில் சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டய படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. வரும் கல்வி ஆண்டில் இதனுடன் சேர்ந்து நுண்கலை பாடத்தில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு தொடங்கப்பட உள்ளன. தேசிய ஆசிரியர் கல்வி மன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், கல்வியல் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் இரண்டு நுண்கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 726 கல்வியியல் கல்லூரிகளில், கல்லூரிக்கு இருவர் வீதம் நுண்கலையில் முதுகலை பட்டம் பெற்ற 1452 பேருக்கு ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது, என்றார். பதிவாளர் மாணிக்க வாசகம், தொலை தூர கல்வி இயக்குனர் குருமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். நுண்கலை மைய இயக்குனர் சரளா நன்றி கூறினார். இதில் 69 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.