கல்வி உதவித்தொகைக்கு வங்கி கணக்கு விபரம்!
சேலம்: மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகைக்கான வங்கி விபரங்களை, தவறுதலாக குறிப்பிட்டால், தலைமை ஆசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என, எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகியவற்றின் மூலம், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவை, நேரடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக்கணக்கில், பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக, மாணவ, மாணவியரின் வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விபரங்கள், தலைமை ஆசிரியர் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த ஆண்டு, மாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்களில், பிழை இருந்ததால், பலருக்கும் உதவித்தொகை பெற முடியாமல் போனது. தற்போது, நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் விபரங்களை, ஆன்லைனில், பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், மாணவர்களின் வங்கி விபரங்களை பல முறை சரிபார்த்து, பிழையின்றி பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், தவறுகள் இருப்பின், தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.