கல்லூரி விடுதி கட்டுமான பணிகள் தீவிரம்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கான விடுதி கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதால் விடுதி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கடந்த 2011ம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கப்பட்டது. புதிய கல்லூரியில், இப்பகுதியை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பி.ஏ., ஆங்கிலம், பி.காம்.,- பி.எஸ்சி., கணிதம், கணிப்பொறியியல் ஆகிய பாடப் பிரிவுகளில் படித்து வருகின்றனர். தற்காலிகமாக கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த நான்கு ஆண்டுகளாக கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு சொந்தமாக கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் ரோடுமாமந்தூர் சாலையில் தனியார் வாடகை கட்டத்தில் இயங்கி வரும், இக்கல்லூரி விடுதியில் 70 மாணவர்கள் தங்கியுள்ளனர். இதில் போதிய அடிப்படை வதிகள் இல்லாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இங்கு தங்குவதற்கு சிரமப்பட்டு மதிய உணவு மட்டும் சாப்பிட்டு விட்டு, வீட்டிற்கு செல்லும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதனை போக்கும் வகையில் கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசுக்கு சொந்தமான இடத்தில் விடுதி அமைக்க இடம் தேர்வானது. இதையொட்டி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் ஒரு கோடியே 47 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கல்லூரி கட்டடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை, அமைச்சர் மோகன் அடிக்கல் நாட்டி துவக்கினார். தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் என மொத்தம் மூன்று தளங்களுடன் மாணவர் விடுதியின் கட்டுமான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.