தனியார் பள்ளி, கல்லூரி பஸ்களால் விபத்து
கரூர்: கரூர் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இருந்து வரும் கல்லூரி வாகனங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாததால், கரூர் நகரில் நாள்தோறும் விபத்து ஏற்பட்டு வருவது குறித்து, அதிகாரிகள் சாக்குபோக்கு கூறிவருகின்றனர். கரூர் மாவட்டம் மட்டுமின்றி, நாமக்கல், சேலம், கோவை மாவட்ட எல்லையில் தனியார் பள்ளிகள், பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகள் அமைந்துள்ளன. இந்த கல்லூரிகளுக்குச் சொந்தமான கல்லூரி பஸ்கள், கரூர் மாவட்டத்தைச் சுற்றிலும் உள்ள மாணவ, மாணவியரை நாள் தோறும் காலை, 7 மணிக்கு அழைத்துச் செல்வதும், மாலை, 6 மணிக்கு கொண்டு வந்து விடுவதும் வாடிக்கை. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கரூரில் இருந்து பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வருகின்றனர். குறைந்தது ஒரு நாளைக்கு, 500க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, கல்லூரி பஸ்கள், வேன்கள் கரூர் நகருக்குள் வந்து செல்கிறது. இவர்கள் எங்கு நிறுத்த வேண்டும், எங்கு நிறுத்தக்கூடாது, என்ற கட்டுப்பாடே கிடையாது. திடீர், திடீரென இவர்கள் சாலையில் கண்டபடி நிறுத்தி விடுவதால் பஸ், வேன் பின்னால் வருபவர்கள் மோதி கிழே விழுந்து காயமடைந்து செல்கின்றனர். அதிகாரி விளக்கம்: இதுகுறித்து கரூர் ஆர்.டி.ஓ., குமரவேல் கூறியதாவது: கரூர் மாவட்டத்துக்குள் தனியார் பள்ளி, கல்லூரி பஸ்கள் இயக்க வேண்டும் என்றால் முறையாக பர்மிட் வாங்கியிருக்க வேண்டும். பஸ்களில் மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அவசர வழி இருக்க வேண்டும். கரூர் நகர் மட்டுமின்றி தனியார் பள்ளி, கல்லூரி பஸ்கள் மக்கள் நெரிசலான பகுதிகளில் நிற்கக் கூடாது. எங்கெங்கு நெரிசலான பகுதிகள் என்று கண்டறிந்து பஸ் மற்றும் வேன்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது. அந்தந்த பகுதியில் நிற்கும் போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படும் பகுதிகளை முதலில் கண்டறிய வேண்டும். அவர்கள் அறிவித்த பின்தான், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் தனியார் பள்ளி, கல்லூரி பஸ்களை நிறுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூற முடியும். இதற்கு போக்குவரத்து போலீசார் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கரூர் டவுன் போக்குவரத்து போலீசார் கூறியதாவது: தனியார் பள்ளி, கல்லூரி பஸ்களுக்கு அனுமதி கொடுத்தால் தான், கரூர் மாவட்டத்துக்குள்ளும், கரூர் நகருக்குள்ளும் வர முடியும். இவர்களுக்கு அனுமதி கொடுக்கும் போதே நெரிசலான இடங்களில் கல்லூரி பஸ், வேன் போன்றவற்றை நிறுத்தக்கூடாது என்று அறிவுறுத்தியிருக்க வேண்டும். கரூர் - கோவை சாலை, உழவர் சந்தை, ஜவஹர் பஜார், திண்ணப்பா தியேட்டர் கார்னர், சி.எஸ்.ஐ., சர்ச் கார்னர் போன்ற முக்கிய நெரிசலான இடங்களில் கல்லூரி வேன் மற்றும் பஸ்கள் நின்று செல்வதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் கல்லூரி, பஸ், வேன்கள் நிறுத்தக்கூடாது என்று கல்லூரி பஸ், வேன் டிரைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். பணம் கட்டியும் பலனில்லை: இதுகுறித்து மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது: நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கே வந்து எங்கள் குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லத்தான் பஸ்சுக்கு மாதந்தோறும் பணம் கட்டுகிறோம். ஆனால், பல்வேறு பிரச்னைகள் இருப்பதால் குறிப்பிட்ட இடங்களில் பள்ளி, கல்லூரி பஸ்கள் நிற்கும் என்று அறிவித்து விட்டால், நாங்களும் அதற்கேற்ப செயல்படுவோம். எங்கோ நிற்கும் பஸ்சை நோக்கி நாங்கள் நாள்தோறும் எங்கள் குழந்தைகளுடன் ஓட வேண்டியிருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.