மாணவியை கடத்திய ஆசிரியருக்கு தர்ம அடி
வேலுார்: நாட்றம்பள்ளி அருகே மாணவியை கடத்திச் சென்ற ஆசிரியருக்கு, பொதுமக்கள் சரமாரி தர்ம அடி கொடுத்தனர். பின், போலீசில் ஒப்படைத்தனர். வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா நாயனசெருவு கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். வீடு திரும்பவில்லை:அதே கிராமத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவி, நேற்று முன்தினம் பள்ளிக்கு கடைசி தேர்வு எழுத சென்றவர், மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே, நாட்றம்பள்ளி அருகே ஏழரைப்பட்டி கிராமத்திலுள்ள ஒரு வீட்டில், மாணவி இருப்பதாக தகவல் கிடைத்தது. மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இரவு, 9:30 மணியளவில் அந்த வீட்டுக்குச் சென்று, மாணவியை மீட்டுச் சென்றனர். இதுதொடர்பாக, அந்த மாணவி பெற்றோரிடம், தேர்வு எழுதி முடித்தவுடன், சமூக அறிவியல் ஆசிரியர் சுதாகர், 33, தன்னை வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில், அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் என கூறினார்அந்த மாணவியின் உடலில் நகக்கீறல்களும், சிறுசிறு காயங்களும் இருந்தது. இதைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சிஅடைந்தனர். பெற்றோர் ஆவேசம்:நேற்று காலை வழக்கம்போல், பள்ளிக்கு வந்த ஆசிரியர் சுதாகர், பதற்றத்துடன் காணப்பட்டார். அங்கு, வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, தலைமை ஆசிரியரிடம் வெளியே சென்று வருவதாகக் கூறி, அவரிடம் அனுமதி பெற்று சென்றார். பின், காலை, 11:00 மணியளவில், மீண்டும் பள்ளிக்கு திரும்பினார். அப்போது, அங்கு அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காத்திருந்தனர். மாணவியை கடத்திச் சென்றது தொடர்பாக, அவரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியதோடு, அடித்து, உதைத்தனர். அதைத்தொடர்ந்து, பள்ளி அறையில் ஆசிரியர் சுதாகரை அடைத்து வைத்து பூட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, ஆசிரியர் சுதாகரை மீட்டு அழைத்துச் சென்றனர்.பின், திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து, ஆசிரியர் சுதாகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.