பள்ளிகளில் தீத்தடுப்பு செய்முறை வகுப்பு அவசியம்!
ஊட்டி: பள்ளிகளில், தீத்தடுப்பு குறித்த செய்முறை வகுப்பை, அவ்வப்போது நடத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. ஊட்டி தீயணைப்புத் துறை சார்பில், தீ தொண்டு நாள் வார அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ தலைமையில், நிலைய அலுவலர் சேகர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், தீத்தடுப்பு பணியின் போது, இறந்த தீயணைப்பு வீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், தீத்தடுப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அதன்படி, சமையல் செய்து முடித்தவுடன், சமையல் காஸ் அடுப்பின், ரெகுலேட்டரை ஆப் செய்ய வேண்டும்; பெண்கள், சமையல் செய்யும் போது, இறுக்கமான பருத்தி ஆகைடகளை அணிந்து கொள்ள வேண்டும். சேலையில் தீ பிடித்தால், கீழே படுத்து உருள வேண்டும்; குளிர்ந்த நீரை தீ காயங்களில் ஊற்ற வேண்டும்.சமையல் அறையில், சமையலுக்கு பயன்படுத்தப்படும், சிலிண்டரை தவிர, காலி சிலிண்டரை கூட அருகில் வைக்கக் கூடாது.பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு, தீ விபத்தின் போது, தங்களை தற்காத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு வகுப்பை, வாரம் ஒரு முறை நடத்த வேண்டும்.வணிக வளாகங்களில், தீ பாதுகாப்பு கருவிகளை பொருத்தி, ஆறு மாதத்திற்கு ஒருமுறை, போலி ஒத்திகை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.மின் தீ விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, தரமான மின் உபகரணங்கள், ஒயர்களை பயன்படுத்த வேண்டும்.ரசாயன தீ விபத்துகள் ஏற்படும் போது, மூச்சுக் கருவிகளை அணிந்து, தீயை அணைக்க வேண்டும்.தொழிற்சாலைகளில், பாதுகாப்பு கவசங்கள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்பது உட்பட கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. தீ விபத்து ஏற்படும் போது, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும்; தீ விபத்து ஏற்படும் போது, 101 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஊட்டி (0423-2442999), குன்னுார் (0423-2230101), கூடலுார் (04262-261399), கோத்தகிரி (04266-274101) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்க வேண்டும்.