உள்ளூர் செய்திகள்

திருக்குறளை கற்பிக்கும் பாடத்திட்டம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர்களை நல்வழிப்படுத்த, திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பாலை உள்ளடக்கிய 108 அதிகாரங்களையும், வரும் கல்வி ஆண்டு முதல் ஆறாவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை விரிவாககற்பிக்கும் வகையில், பாடத்திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.ஓய்வு பெற்ற வணிகவரி அலுவலர் கோவில்பட்டி ராஜ ரத்தினம் தாக்கல் செய்த மனு: சமூகத்தில் இளைஞர்களின் நன்னடத்தை குறைந்துள்ளது. திருமண விவகாரங்கள், முதியோர் இல்ல பிரச்னை வழக்குகள் அதிகமாக நீதிமன்றங்களில் தாக்கலாகின்றன. மாணவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.இளைஞர்களிடம் கல்வி மூலம் நன்னடத்தை, ஒழுக்கத்தை போதிக்க திருக்குறளை ஒரு கருவியாக பயன்படுத்தலாம். அதில் வாழ்வியலின் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. தற்போதுள்ள பாடத்திட்டத்தின் படி, திருக்குறளில் சில அதிகாரங்களை மட்டும் அறிந்த நிலையில் மாணவர்கள் உள்ளனர். 1330 குறட்பாக்களையும் மாணவர்கள் நன்றாக கற்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில் இருந்து ஆறாவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடத் திட்டத்தை மாற்றி அமைத்து, திருக்குறளை தனிப்பாடமாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ராஜரத்தினம் மனு செய்திருந்தார்.நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் ஏ.சரவணக்குமார் ஆஜரானார். அரசு வழக்கறிஞர்: ஏற்கனவே பள்ளி பாடத்திட்டத்தில் 275 திருக்குறள், மகாபாரதம், அகநானுாறு, புறநானுாறு, ஆத்திசூடி, சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மணிமேகலை இலக்கியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், திருக்குறளை சேர்க்க வேண்டியதில்லை. திருக்குறளை, பாடத்திட்டத்தில் தனி ஒரு பிரிவாக ஏற்படுத்த வேண்டியதில்லை. நீதிபதி உத்தரவு: தற்போது குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சிறார் குற்றங்கள், விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன. முறையற்ற வாழ்க்கைத்தரம் நிலவுகிறது. இளம் தலைமுறையை சரியான விதத்தில் முறையான கல்வியோடு, நேர்வழிப்படுத்தினால், சிறந்த குடிமகன்களாக வருவர். திருக்குறளை தேர்விற்காக மனப்பாடப் பகுதி என்ற குறுகிய அளவில் இல்லாமல், உரிய விளக்கங்களோடு அனைத்து கூறுகளையும் பயிற்றுவித்தால், மாணவர்களின் அறிவு மேம்படும். பயங்கரவாதம், கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் குற்றங்கள், வேலையின்மை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், மதுவின் பாதிப்பு இன்றைய சமுதாயத்தில் பெரும் பிரச்னைகளாக உள்ளன. திருக்குறளை முழுமையாக கற்றால், இதுபோன்ற தவறுகள், பிரச்னைகளை உணர்ந்து இளைய சமுதாயத்தினர், தங்கள் வாழ்க்கையை செழுமைப்படுத்திக் கொள்வர். மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய, எவ்வித வாழ்க்கை வாழ வேண்டும் என வலியுறுத்தும் திருக்குறளை, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு மானப்பாடப் பகுதி என்பதோடு நிறுத்திவிடாமல், அறத்துப்பால், பொருட்பால் குறட்பாக்களை தெளிவாக கற்பிக்க வேண்டும். தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பு ஏற்படுவதற்கு முன், திருக்குறளை கட்டாய பாடமாக்க 1948-49ல் அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசியல் காரணங்களால், சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாகியும், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. அனைவருக்கும் நல்ல கல்வி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் திருக்குறள், பைபிள், குரானுக்கு அடுத்தபடியாக 90 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வாழ்வின் அனைத்து அம்சங்களையும் திருக்குறள் தெளிவுபடுத்தி உள்ளது. வெளிநாடுகளிலும் திருக்குறள் கற்பிக்கப்படுகிறது. நன்னடத்தை மிக முக்கியம். நன்னடத்தை தவறினால், எவ்வளவு உயர்ந்த புகழின் உச்சியில் இருந்தாலும், மனிதன் தாழ்ந்தவன் ஆகிறான். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, திருவள்ளுவரால் தொலைநோக்கு பார்வையுடன் உலக வாழ்வின் அத்தனை கூறுகளையும் எடுத்துக்கூறும் குறட்பாக்கள் மட்டுமே, இச்சமுதாயத்தை சீர்படுத்த முடியும். திருக்குறளை விரிவாக கற்பது, படிப்பது மட்டுமே சிறந்த வாழ்விற்கான வழி. பல்வேறு சிறந்த இலக்கியங்கள் இம்மண்ணில் தோன்றியிருந்தாலும், திருக்குறள் போல் மனிதனின் வாழ்வை மேம்படுத்தக்கூடிய சிறந்த படைப்பு வேறொன்றுமில்லை. விரிவாக திருக்குறள் கற்பிக்கப்படுமானால், மாணவர்கள் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு, தீர்வுகளை தேடிக்கொள்வர். திருக்குறளில் இன்பத்துப்பாலை தவிர்த்து அறத்துப்பால், பொருட்பாலை உள்ளடக்கிய 108 அதிகாரங்களையும், வரும் கல்வி ஆண்டில் இருந்து (2016-17) ஆறாவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை விரிவாக கற்பிக்கும் வகையில், பாடத்திட்டக்குழு மூலம், பாடத்திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும். கல்வியின் நோக்கம், நன்னடத்தையுடன் கூடிய வளர்ச்சியை உருவாக்குவதே. அதன் அடிப்படையில் இதை அரசு நிறைவேற்றினால் சமூகம், மொழிக்கு மிகப்பெரிய பங்களிப்பாக அமையும்.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்