பள்ளிகளில் கணினி வழி கற்றல் திட்டம்!
கோவை: கணினி வழி கற்றல் திட்டத்தில், கோவை கல்வி மாவட்டத்தில், 416 பள்ளிகளுக்கு, 1,248 கம்ப்யூட்டர் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், 2004ம் ஆண்டு முதல் கணினி வழி கற்றல் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம், நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்பபுற மாணவர்களுக்கும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் சார்ந்த அடிப்படை திறனை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இத்திட்டத்தில், அடங்கும். மாவட்டங்களுக்கு, இத்திட்டத்தில், 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 2004ம் ஆண்டு முதல், 2015-16ம் வரை, 416 நடுநிலைப்பள்ளிகளுக்கு, 1,248 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த கல்வியாண்டில் மட்டும், 42 பள்ளிகளுக்கு, 125 கம்ப்யூட்டர்கள், 41 லட்சம் நிதி பயன்பாட்டில் வினியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட உதவி திட்ட அலுவலர் டெல்ராஜ் கூறுகையில், கணினி வழி கற்றல் திட்டம் மாணவர்களுக்கு அடிப்படை தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த உதவுகிறது. நடப்பு கல்வியாண்டில், 31 பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்த தகவல் பட்ஜெட் திட்ட மதிப்பீட்டில் சேர்த்து அனுப்பியுள்ளோம். நிதி ஒதுக்கீடு குறித்த தெளிவான அறிவிப்பு வந்த பின்பே இதுகுறித்து கூற முடியும், என்றார்.