மாணவர்கள் கழுகு போல் இருக்க வேண்டும்!
நத்தம்: மாணவர்கள் சவாலான வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும், என டாடா மென்பொருள் நிறுவன தரக்கட்டுப்பாடு தலைமை அதிகாரி பட்டா பிராமன் பேசினார்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா, செயல் அலுவலர் அழகப்பன் தலைமையில் நடந்தது. இளநிலை, முதுநிலை பொறியியல் முடித்த 422 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. டாடா மென்பொருள் நிறுவன அதிகாரி பட்டாபிராமன், விர்ட்யூசா பொலரிஸ் ஐ.டி. நிறுவன மனிதவள தலைமை அதிகாரி கிறிஸ்டினா அகஸ்டின், ஸ்நெய்டர் எலக்ட்ரிக் நிறுவன மனிதவள மேலாளர் காமாட்சி ராமநாதன் ஆகியோர் பட்டங்களை வழங்கினர். பட்டாபிராமன் பேசியதாவது:மாணவர்கள் பெறும் பட்டம் அவர்களுக்கு மட்டும் சொந்தமானது என கூறிவிட முடியாது. பெற்றோர், ஆசிரியர் என பலரின் பங்கு உண்டு. கல்வி என்பது மாணவர்களை இருளில் இருந்து ஒளிமயமான சமுதாயத்திற்கு கொண்டு செல்வதாகும். ஆசிரியர்கள் படிப்பை மட்டும் கற்பிக்காமல், வாழ்க்கையின் அர்த்தங்களையும் கற்பிக்க வேண்டும். கல்வி முடிந்து பணியில் சேர்ந்த போதிலும் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். புதிய சிந்தனைகளோடு திட்டமிட்டு செயல்பட வேண்டும். புயல் வரும் போது, பறவைகளை போல் ஓடி மறையாமல் எதிர்த்து செயல்படும் திறன் உடையது கழுகு. அது போல மாணவர்கள் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியேறி, சவாலான வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.முதல்வர் வீரசாத்தப்பன், பேராசிரியர் மருதுகண்ணன் பங்கேற்றனர்.