உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விரைவில் ரத்து

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், அமைச்சகம் சார்பில் முதல் 100 நாட்களில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் குறித்த விவரங்களை வெளியிட்டார். அதுபற்றி அவர் கூறியதாவது:கல்வி என்பது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் துன்பம் தரும் விஷயமாகவோ, அவர்களுக்கு துயரம் தரும் விஷயமாகவோ இருக்கக் கூடாது. பத்தாம் வகுப்பு தேர்வு நெருங்கி விட்டாலே, மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தூக்கம் போய் விடுகிறது. அந்த நிலை தொடரக் கூடாது; இது ஏற்றுக் கொள்ள முடியாதது. அதனால், கல்வி முறையை துன்பமில்லாததாக மாற்ற வேண்டும். அதற்காக சீர்த்திருத்தங்களைக் கொண்டு வருவோம். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவது, ரத்து செய்யப்படும். அதாவது, பத்தாம் வகுப்பு தேர்வை பொதுத் தேர்வாக எழுதுவதை, விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். கல்வியும்; தேர்வும், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பதட்டத்தை உருவாக்குவதாக இருக்கக் கூடாது. மாணவர்களின் சாதனையை மதிப்பீடு செய்யும் தற்போதைய முறையில் மாற்றங்கள் செய்யப்படும். சி.பி.எஸ்.இ., முறையில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுக்கு பதிலாக, கிரேடு முறை கொண்டு வரப்படும். ‘தேசிய பாடத்திட்ட வரைவு -2005’ அடிப்படையில், தேர்வு முறையில் சீர்த்திருத்தம் கொண்டு வரப்படும். இதன்மூலம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவது விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்வதாக மாற்றி அமைக்கப்படும். பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளியிலேயே அடுத்தும் படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள், அதாவது சி.பி.எஸ்.இ., போர்டின் சான்றிதழ் தேவைப்படாத மாணவர்கள் உள் மதிப்பீட்டு தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. பொதுத் தேர்வு எழுதத் தேவையில்லை. இந்த புதிய முறை அடுத்த 100 நாட்களில் அமல்படுத்தப்படும். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் முன்னர், மாநில கல்வி வாரியங்களுடன் கலந்து ஆலோசித்து, அவர்களின் கருத்துக்களும் கேட்கப்படும். பள்ளிகள் உடனும் கலந்து ஆலோசிக்கப்படும்.குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவதை உரிமையாக் கும் சட்டமும் இயற்றப்படும். வரக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அந்தச் சட்டம் நிறைவேற்றப்படும். பள்ளிக் கல்வியில் பொதுத்துறை - தனியார் துறை பங்களிப்பை அதிகரிக்க கொள்கை ஒன்றையும் அரசு உருவாக்கும். உயர் கல்விக்காக மாணவர்கள் பெறும் கடன்களுக்கான வட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமே ஏற்றுக் கொள்ளும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்