காமராஜ் பல்கலையின் புதிய கல்விமையங்கள் துவக்கம்
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் புதிய மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி மையங்கள் புதிதாக துவக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே 35 மையங்கள் உள்ளன. புதிதாக பழநி, விழுப்புரம், காஞ்சிபுரத்தில் மூன்று மாணவர் சேர்க்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிறமாநிலங்களை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள 79 கல்வி மையங்களுடன், புதிதாக 8 கல்வி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. கேரளத்தில் ஆட்டிங்கல், கர்நாடகாவில் பெங்களூரு, உடுப்பியிலும், ஆந்திராவில் செகந்திராபாத், பீகாரில் கயா, உ.பி.,யில் அலகாபாத், வாரணாசி, பஞ்சாபில் ஜலந்தரில் இம்மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இவை தவிர 3 வெளிநாடுகளிலும் புதிய கல்வி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. அபுதாபி மற்றும் சவுதி அரேபியா, சூடான் நாடுகளில் இவை அமைந்துள்ளன. இதன்மூலம் மொத்தம் 15 நாடுகளில் காமராஜ் பல்கலையின் கல்வி மையங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மையங்களை அமைக்க கடந்த மே 22ல் நடந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் ஜூன் 30ம் தேதியுடன் நடப்பு கல்வியாண்டு அட்மிஷன் முடிவடையும். தொடர்ந்து ஜூலை 1 முதல் 2009 - 10ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடரும். இதுபற்றி தொலை நிலைக் கல்வி இணையதளத்திலும் (www.mkudde.org) விபரம் அறியலாம் என இயக்குனர் சபா.வடிவேலு தெரிவித்துள்ளார்.