உள்ளூர் செய்திகள்

கல்வி உரிமை மசோதா கதி என்ன?

எல்லாரும் கல்வி பெற வேண்டும்; அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. இந்த வகையில் அரசு, கல்வி உரிமை மசோதாவை கொண்டு வர திட்டமிட்டது. கடந்தாண்டு ராஜ்யசபாவிலும் இது தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதன் பின் அது பற்றி பேச்சில்லை. கல்வி உரிமை பெறும் மசோதா கொண்டு வர வேண்டும் என்று தேசிய அறிவுசார் ஆணையம் பரிந்துரை செய்தது. ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, மனித வளத்துறையின் பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு, மசோதா குறித்த அறிக்கையை பிப்ரவரி மாதம் ராஜ்யசபாவில் சமர்ப்பித்தது. இந்நிலையில், புதிதாக பொறுப் பேற்றுள்ள ஐ.மு., கூட்டணி அரசு, கல்வி பெறும் உரிமை மசோதாவை பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளது. மசோதாவின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை தெரிவிக்கும்படி மனித வளத்துறை அமைச்சகத்துக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் அலுவலகம் சார்பில், மனித வளத்துறை அமைச்சகத்துக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அறிவுசார் ஆணையத்தின் தலைவர் சாம் பிட்ரோடா ஏற்கனவே மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபலை சந்தித்து, கல்வி நிறுவனங்கள் தொடர்பான ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது குறித்து விவாதித்தார். மேலும், அமைச்சர் கபில் சிபல், அடுத்த மாதம் நடக்கவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதியில் இம்மசோதா நிறைவேற்றப்படும் என ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிட்ரோடா கூறுகையில், மன்மோகன் சிங் தலைமையிலான இந்த அரசு, தேசிய அறிவுசார் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். இந்நிலையில், மனித வளத்துறை அமைச்சகம், தேசிய அறிவுசார் ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல் படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாண்டுகளில் தேசிய அறிவுசார் ஆணையம் வெவ்வேறு விதமான 27 பிரிவுகளில், 300 பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி உள்ளது. ஆனால், பரிந்துரைகளைச் செயல்படுத்துவது தான் மந்தமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்