உள்ளூர் செய்திகள்

அரசு நடுநிலைப்பள்ளியின் ‘அவலம்’: பெற்றோர் குமுறல்

செங்குன்றம்: எந்த நேரத்திலும் இடிந்து விழும் ‘அபாயத்தில்’ அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத பள்ளி சீரமைக்கப்படாததால், பிள்ளைகளின் பாதுகாப்பில் அதிருப்தி அடைந்த பெற்றோர் குமுறுகின்றனர். சென்னை புழல் அடுத்த சூரப்பட்டு ஊராட்சியில் உள்ள சண்முகபுரம் பாரதிதாசன் நகரில், புழல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அப்பள்ளியில், கடந்த ஆண்டு வரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 600 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ்’ புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், அக்கட்டடம் கடந்த சில மாதங்களுக்கு முன், ஒரு நாள் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதனால், அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தப்பினர். குண்டு வீச்சில் சேதமடைந் தது போல் மேற்கூரை இடிந்து பக்கவாட்டு சுவர்களும் விரிசல் கண்டு மொத்த கட்டடமும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ‘அபாயம்’ உள்ளது. அனைவரையும் மிரட்டும் கட்டடத்தின் நிலை குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் தரப்பில் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளிடத்தில் பல முறை புகார் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது, அப்பள்ளியில், 414 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். பாதுகாப்பற்ற பள்ளிக்கட்டடம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வேறு பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இடம் மாறிவிட்டனராம். இப்போது பழைய பள்ளிக் கட்டடத்தில் 1 முதல் 5ம்வகுப்பு வரையிலும், அடுத்த தெருவில் உள்ள மற்றொரு பள்ளிக் கட்டத்தில் 6,7 மற்றும் 8ம் வகுப்புகளும் நடக்கின்றன. மேலும் 3 மற்றும் 4,5ம் வகுப்புகள் அவ்வப்போது மற்றொரு பகுதியில் உள்ள கோவில் மரத்தடியில் நடத்தப்படுகின்றன. மாணவ, மாணவிகளுக்கு தேவையான கரும்பலகை, டேபிள், நாற்காலி உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை வசதிகள் அங்கு இல்லை. பழைய பள்ளிக்கட்டடத்தில் மாணவ, மாணவிகளுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களும் கூட கழிப்பிட வசதியுமின்றி அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்