சமையல் அறை இல்லாத புதிய பள்ளிக்கூடம்!
காயல்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காயல்பட்டணத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதன்படி காயல்பட்டணம் தைக்கா தெருவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று அமைக்கப்பட்டு செ யல்பட்டு வருகிறது. சுமார் 25 வருட காலத்திற்கும் மேலான இப்பள்ளி பழமையான கட்டடத்தில் பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவியர்கள் பாதுகாப்பாக வந்துசென்று படித்திடும் வகையில் அரசு சார்பில் 5 லட்ச ரூபாய் திட்ட மதிப்பில் தைக்கா தெருவில் புதியதாக பள்ளிக்கட்டடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இப்புதிய கட்டடத்தில் தான் தற்போது பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் காயல்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் படித்து வரும் நிலையில் 5 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய கட்டடத்தில் பள்ளி செயல்பட்டு வந்தாலும் புதிய பள்ளிக்கட்டட வளாகத்தில் சத்துணவு சமைப்பதற்கு தேவையான சமையல்அறை கட்டடமானது இன்றுவரை புதியதாக கட்டிக்கொடுக்கப்படாமலேயே இருந்து வருகிறது.சமையலறை வசதி இல்லாத காரணத்தினால் மாணவ-மாணவியர்களுக்கான சத்துணவு பழைய பள்ளி கட்டடம் வளாகப் பகுதியிலுள்ள பழமையான பாதுகாப்பற்ற சமையல் அறை கட்டடத்திலேயே தயார் செய்யப்பட்டு புதிய பள்ளிக்கு கொண்டு வரப்படுகிறது. பழமையான சமையல் அறை கட்டடத்தில், மேற்கூரைகள் எதுவும் சரிவர இல்லாத நிலையில் பாதுகாப்பற்ற முறையிலேயே மாணவர்களுக்கான சத்துணவுகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. எந்தநேரத்திலும் இடிந்துவிழுந்திடும் நிலையிலுள்ள பழைய சமையல் அறையில் சத்துணவு பணியாளர், உதவியாளர்கள் பயந்து பயந்தே உணவை தயாரித்தும் வருகின்றனர். மேலும் பழமையான பாதுகாப்பற்ற சமையல் அறை கட்டடத்திற்குள் இரவு நேரங்களில் ஆடு, மாடு, கழுதை போன்ற கால்நடைகளும் தங்கி ஓய்வெடுத்து செல்கின்றன. இதனால் இந்த சமையல் அறையில் சுகாதாரம் என்பெதெல்லாம் கேள்விக்குறியாகியுள்ளது.பாதுகாப்பற்ற கட்டடத்தில் சத்துணவு தயாரித்து, பல அடி தூரத்தில் இருக்கும் புதிய பள்ளிக் கட்டடத்திற்கு கொண்டு செல்வதற்குள் சத்துணவு பணியாளர்கள் படாதபாடுபட்டும் வருகின்றனர்.இந்நிலையில் புதிய பள்ளிக்கட்டடத்தின் வளாகத்திலேயே சமையல் அறை வசதி செய்து கொடுத்திடவேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர், பணியாளர்கள், மாணவ-மாணவியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.