கேரளாவில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் தொடங்கத் திட்டம்
கேரளத்தில் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தையும் பள்ளிப் பாடத்திட்டத்தில் விளையாட்டை ஒரு பாடமாக்கவும் மாநில அரசு நியமித்த விளையாட்டுக் கமிஷன் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஏ.கே. பாண்டியா தலைமையில் அமைக்கப்பட்ட விளையாட்டு கமிஷன் பரிந்துரைகளை கேரள அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்று கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தெரிவித்தார். உடற் கல்வி ஆசிரியர்களையும் விளையாட்டு கோச்சுகளையும் உருவாக்குவதற்கும் விளையாட்டு அறிவியல் தொடர்பான ஆய்வுகளை மேம்படுத்தவும் தனி விளையாட்டுப் பல்கலைக்கழகம் அவசியம் என்று அந்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதனை அமைச்சரவை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்தப் புதிய பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு உடற் கல்வி பட்டப் படிப்புடன் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இளம் வயதியிலே விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு ஏற்ப கல்வி உதவித் தொகையை வழங்குவதற்கும் அறக்கொடைகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அந்தக் கமிஷன் தனது பரிந்துரைகளில் குறிப்பிட்டுள்ளது.