கூலி வேலைக்கு செல்லும் கவுரவ விரிவுரையாளர்கள்
அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் பெரும்பாலானோர், விவசாய கூலி மற்றும் நுாறு நாள் வேலைத் திட்ட பணிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 4,084 கவுரவ விரிவுரையாளர்கள், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, மே மாதம் தவிர்த்து, 11 மாதங்களுக்கு, மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கல்லுாரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலைமாதம் வழங்க வேண்டிய ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் கிராமப் புறங்களில் வசிக்கும் கவுர விரிவுரையாளர்கள் பலர், தங்கள் கிராமத்தில் நடக்கும் நுாறு நாள் வேலை திட்ட பணிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்திவருகின்றனர்.இது குறித்து கவுரவ விரிவுரையாளர் ஒருவர் கூறுகையில், &'கடந்த நான்கு மாதங்களாக கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளதால்,எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், வருமானம் இன்றி மிகவும் சிரமமாக உள்ளது. தற்போது எங்கள் ஊரில் நடைபெறும் விவசாய கூலி வேலை, நுாறுநாள் திட்ட பணிக்குசென்று குடும்பத்தை நடத்தி வருகிறேன். தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது&' என்றார்.