உள்ளூர் செய்திகள்

ஏன் பெண்களுக்கு எதிராக இத்தனை கொடுமைகள்?

ஒரு விளையாட்டு வீரர் தோல்வி அடைகிறார் என்றால், அந்த விளையாட்டு வெறியர்கள் அவருடைய பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுகிறார்கள்.ஒரு சினிமா நடிகர் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தில் நடிக்க கூடாது என்பதற்கு அவருடைய பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடப்படுகிறது.இந்த நடிகருடைய குழந்தையும் இந்த விளையாட்டு வீரர் உடைய குழந்தையும் அவர்களுக்கு பெண் குழந்தையாக பிறந்ததை தவிர என்ன தவறு செய்தார்கள்,அதைக் கூட தவறு என்று சொல்லமுடியாது, சொல்லக்கூடாது? தந்தையை காயப்படுத்த நினைக்கும் காமுகர்களுக்கும், கயவர்களுக்கும் முன்னால் அந்த பிஞ்சு பெண் நெஞ்சுக்கு எதுவும் தெரியவும் செய்யாது புரியவும் புரியாது.ஆணிற்கும் பெண்ணிர்க்குமான உறவில் மித மிஞ்சி பேசப்படுவது தந்தை-மகள் உறவுதான் இந்த உறவில்தான் மகள் தன் தந்தையிடமிருந்து உயிர், உடல், உணவு, உடை, உறைவிடம், மற்றும் தன் எதிர்கால வாழ்க்கைக்கான உத்தரவாதத்தை பெறுகிறாள் பதிலுக்கு அந்தத் தந்தை எதிர்பார்ப்பது,&' அன்பு ஒழுக அப்பா என்று மகள் அழைப்பதை மட்டுமே&'.ஒரு பெண்ணிற்கு சொல்லாலும் செயலாலும் கொடுமை செய்ய நினைக்கும் ஒவ்வொரு ஆணும் அந்த தந்தையின் மனநிலையில் இருந்து அந்த பெண்ணைப் பாருங்கள் மனிதனாக இருந்தால் மனம் தெளியும். இந்த கொரோனா முடக்க காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து உள்ளது,அன்றாடம் அதை செய்தித்தாள் மூலமாக படிக்கும் போது மனம் கனக்கிறது.இந்த சமூகத்தில் ஏன் பெண்களுக்கு எதிராக இத்தனை குற்றங்கள்?இந்த சமூகம் கமலா ஹாரிஸ், கல்பனா சாவ்லா, கிரண் மஜூம்தார், ஜெயலலிதா,இந்திரா காந்தி போன்றவர்களை வீட்டிற்கு வெளியே பாராட்டி போற்றுமே தவிர அப்படி ஒருவரை தங்கள் வீட்டிற்குள் உருவாக்க கொஞ்சமும் முயற்சிக்காது முன்வரவும் செய்யாது. ஆண்களும் பெண்களும் சமம் என்று புத்தகத்தில் படிப்பார்களே தவிர நிஜத்தில் நடைமுறைப்படுத்தமாட்டர்.பிறந்த குழந்தை ஆண் என்றால் அந்தத் தாயும் சேயும் மதிப்போடு பார்க்கப்படுவதும் பெண்ணென்றால் வேண்டா வெறுப்பாக விலக்கப்படுவதும் இன்றும் பல இடங்களில் படித்தவர்கள் இடையேயும் கூட நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பெண் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் மனது, இரண்டாவது பெண் குழந்தையை ஏற்றுக்கொள்ள துணிவதில்லை.தங்களைப் பெண்ணியவாதியாக காட்டிக் கொள்ளும் பல ஆண்கள் வீட்டில் மனைவியை நடத்தும் விதம் மோசமானதாக இருக்கும், மனைவியை பக்கத்து வீட்டிற்கு கூட அனுப்ப மாட்டார்கள். நல்ல வரன் வந்தது அப்பா சாகக்கிடக்கிறார் தாத்தாவின் கடைசி ஆசை அது இது என்று சொல்லி நன்றாக படித்துக் கொண்டு இருக்கும் பெண்ணை அவசரம் அவசரமாக திருமணம் செய்து வைக்கும் கொடுமையும் இங்குதான் அதிகம். இந்த கடைசி ஆசை தோசை எல்லாம் பெண்களிடம் மட்டும்தான் செல்லும் எங்கே ஆண்களிடம் சொல்லிப்பாருங்கள் உனக்கு நான்தான் கிடைச்சேனா ‛போய்சேர்ர&' வழியப்பாருய்யா என்று அலட்சியமாகச் சொல்வர்.இந்த சமுதாயத்தில் ஆண்கள்,பெண்கள் இருவருக்குமே மிகப்பெரிய மனமாற்றம் தேவை.பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கடுமையான தண்டனை, அதுவும் விரைவாக கொடுக்கப்பட வேண்டும் இந்த தண்டனையின் தன்மையும் அந்த தண்டனை செயல்படுத்தும் வேகத்தையும் பார்த்தால் எந்த பெண்ணையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கத் தோன்றக்கூடாது.மேலும் பெண் குழந்தைகளை மையாக வைத்து மிரட்டல் விடுபவர்களையும் தண்டனை செய்தவர்களாகவே கருதி தண்டிக்க வேண்டும் காரணம் இன்று மனதில் இருப்பதுதானே நாளை செயலில்வரும்.இன்றைய பெண்கள் தங்களை தாங்களே முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். தங்களது தேவைகளை தேவையில்லாமல் தியாகம் செய்யவேண்டியது இல்லை நாம் யாருக்கும் எதற்கும் குறைந்தவர் இல்லை என்பதை உணரவேண்டும் எல்லாத்தையும் குடும்பத்திற்கு கொடுத்துவிட்டு வெறும் மோர்சாதம் சாப்பிட்டுவிட்டு வீட்டின் மூலையில் முடங்கிக்கிடப்பதை முதலில் துாக்கி எறியுங்கள்.வேலைக்கு செல்லாமல் வீட்டில் குடும்பத் தலைவியாக இருப்பவரை இன்னும் அதிகமாக மதிக்க வேண்டும் இருபத்தி நாலு மணிநேரமும் சலிக்காமல் உழைத்துக் கொண்டே இருப்பதற்கு அவரது உடம்பு ஒன்றும் இரும்பால் ஆனது இல்லை ரத்தமும் சதையும் உணர்வும் வலியும் கொண்டதுதான் அவருடைய உடம்பும் என்பதை அவரைச் சுற்றி உள்ளவர்கள் உணரவேண்டும் அவர்களுக்கு நல்ல உடை இருக்கக்கூடாதா? விருப்பப்பட்ட இடங்களுக்கு போகக்கூடாதா?விரும்பிய விஷயங்களுக்கு செலவழிக்கக்கூடாதா?நண்பர்களுடன் பழகக்கூடாதா?தனக்கென சுதந்திரம்தான் இருக்கக்கூடாதா? இதை எல்லாம் உணராதவர்களுக்கு நாம்தான் உணர்த்தவேண்டும்.கட்டாயம் பட்டப்படிப்பு கூடவே ஒரு கைத்தொழில் கொஞ்சம் கூடுதலாக தற்காப்புக் கலை நிறைய விழிப்புணர்வு என்பதை வளர்இளம் பெண்கள் ஒரு கொள்கையாக வைத்துக் கொள்ள வேண்டும்.இதற்கெல்லாம் ஒரு நல்ல தீர்வாக முதல் தீர்வாக இருக்கப் போவது பெண்களுக்கான குறைந்த பட்ச திருமண வயதை 21 என்றாக்குவதுதான் இந்த வயதில் ஒரளவு பெண்களுக்கு நல்லது கெட்டதை பகுத்துணர்ந்து அறியும் மனமுதிர்ச்சி இருக்கும் நாடு முழுவதும் பெண்களால் வலியுறுத்தப்படும் இந்த 21 வயது திருமண சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து பிரதமர் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார் என்று வரும் தகவல்கள் சந்தோஷத்தை தருகிறது ரொம்ப யோசிக்காதீங்க பிரதமர் சார் இந்த சட்டத்தை உடனே கொண்டு வாங்க எங்களைப் போன்ற பெண்கள் பூத்துாவி வரவேற்க காத்திருக்கிறோம்.-டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மாபோன் எண்:80560 87139.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்