மாணவ, மாணவியர் கூட்டத்தால் ஸ்தம்பித்தது பொன்னேரி
பஸ் நிலையம் அமைந்துள்ள புதிய தேரடி சாலையில் உள்ள பிரசன்ன விநாயகர் திருமண மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, கவரைப் பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 3,500க்கும் மேற் பட்ட பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, காலை 6 மணி முதல் புதிய தேரடி சாலையில் மாணவ, மாணவியர் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நிகழ்ச்சி நடந்த அரங்கின் இருபுறமும் மாணவ, மாணவியரை தனித்தனியாக வரிசைபடுத்தி பாதுகாப்பாக அரங்கத்தினுள் அனுப்பினர்.பொன்னேரி டி.எஸ்.பி., ரங்கராஜன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார், மாணவர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.நிகழ்ச்சி முடிந்து பிற்பகல் 12.40 மணிக்கு அரங்கில் இருந்து மாணவ, மாணவியர் மடை திறந்த வெள்ளம் போல் சாரை சாரையாக வெளியேறினர். புதிய தேரடி சாலை, மாணவர்கள் வெள்ளத் தால் நிரம்பி வழிந்தது.இதனால், அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அனைத்து வாகனங்களும் தாயுமான்செட்டி சாலை வழியாக திருப்பிவிடப்பட் டது. அரங்கில் இருந்து வெளியேறிய மாணவ, மாணவியர் கலைந்து செல்ல ஒரு மணி நேரமானதால் பொன்னேரி பகுதி ஸ்தம்பித்தது.தினமலர், ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முதன்முதலாக பொன்னேரி பிரசன்ன விநாயகர் திருமண மண்டபத்தில் நடந்தது.இதில் கலந்து கொள்ள அதிகாலை முதல் மாணவ, மாணவியர் சாரை சாரையாக மண்டபத்திற்கு வந்தனர். குளிரையும், அதிகாலை பனியையும் பொருட்படுத்தாமல் அமைதியாக மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி 8 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப் பட்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கே மாணவ, மாணவியர் குவிந்ததால் காலை 7.30 மணிக்கு அரங்கத்திற்குள் அவர்கள் அனுமதிக்கப் பட்டனர்.மாணவர்கள் அனைவருக்கும், ஜெயித்துக் காட்டுவோம் குறித்த முழு வழிகாட்டி புத்தகம், தேர்வில் வரும் முக்கிய வினாக்கள் மற்றும் புளு பிரின்ட், உடல் நலம் காப்பது குறித்த புத்தகம், குறிப்பு எழுத நோட்டு, பேனா மற்றும் பிஸ்கட் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.ஆர்வமாக அவற்றைப் பெற்ற மாணவ, மாணவியர் அமைதியாக அரங் கிற்குள் சென்றனர். பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு குறித்த பயம் நீங்கி அதிக மதிப்பெண் பெற கணித ஆசிரியர் கேசவன், அறிவியல் மற்றும் ஆங்கிலம் ஆசிரியர் ஆனந்தன், தமிழாசிரியர் மதியழகன் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ரவி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.நிகழ்ச்சி துளிகள்...* தினமலர் சார்பில் முதல் முறையாக ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி பொன்னேரியில் நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக நடந்தது.* கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சுண்ணாம்புகுளம், ஆரணி, அம்பத்தூர், ஈகுவார்பாளையம், ஆண் டார்குப் பம், போளூர், தேர்வாய், ஆரம்பாக்கம், மாதர்பாக்கம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியர் சாரை சாரையாய் வந்தனர்.* குளிரையும், பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் காலை 4.30 மணி முதல் மாணவ, மாணவியர் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தின் முன் காத்திருந்தனர்.* ஏராளமான பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் தங்களது மாணவ, மாணவியரை பஸ்களில் அழைத்து வந்தனர்.* பெற்றோர் சிலர் பைக், சைக்கிள் ஆகியவற்றில் தங்களது பிள்ளைகளை அழைத்து வந்து மண்டப வாசலில் விட்டுச் சென்றனர்.* சில பெற்றோர், தங்களது பிள்ளைகள் வர முடியாத காரணத்தால், அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்து ஆசிரியர் அளித்த விளக்கங்களை குறிப்பெடுத்தனர்.* மாவட்ட எஸ்.பி., சாரங்கன் உத்தரவின் பேரில் பொன்னேரி டி.எஸ்.பி., ரங்கராஜன், இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் திரளான போலீசார் மற்றும் மகளிர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இன்றி போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டனர்.