உள்ளூர் செய்திகள்

சுரண்டலில் இது, புதுசு!: மாணவர்களே உஷார்

கோவை அருகேயுள்ள வடவள்ளியில், மருதமலை தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகளில் கல்வீரம்பாளையம், பொம்மணம்பாளையம், கஸ்தூரி நாயக்கன்பாளையம், வீரகேரளம் உள்பட சுற்றுவட்டார 10 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக் கின்றனர். இப்பள்ளிகளுக்கு அருகிலுள்ள டெய்லர் கடை, பேன்சி ஸ்டோர், புக் ஸ்டால் நடத்துவோர், மாணவ, மாணவியருக்கான சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில்  துவக்கியுள் ளனர். தினமும்  2 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வசூலித்துக் கொண்டு, அதற்கான வரவு அட்டையில் குறிப்பெழுதி தருகின்றனர்.செலுத்திய தொகையை இடைப்பட்ட நாளில் வழங்க முடியாது; 100 ரூபாய் வரை கட்டினால், 95 ரூபாய் தான் வழங்கப்படும் என்றெல்லாம் பல விதிமுறைகளை வகுத்துள்ளனர். சில மாணவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்திய பின், ஏதாவது ஒரு காரணத்தால் தொடர்ந்து செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது, முன்பு செலுத்திய தொகையை தராமல் இழுத்தடித்து மோசடி செய்கின்றனர்.இது தொடர்பாக பெற்றோர் தரப்பில் இருந்து, பள்ளி நிர்வாகங்களுக்கும் புகார் சென்றுள்ளது. இதை தொடர்ந்து, மாணவர்களிடம் விசாரணை நடத்திய மருதமலை தேவஸ்தான பள்ளி நிர்வாகம், சில மாணவர்களிடமிருந்து சிறு சேமிப்பு என்ற பெயரிலான அட்டைகளை பறிமுதல் செய்துள்ளது.  மேலும், பள்ளி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை மீறி தனியார் நபர்கள் நடத்தும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேரக் கூடாது எனவும், அவ்வாறு செயல்பட்டு பண இழப்புக்கு ஆளானால் பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காது எனவும் சுற்றறிக்கை அளித்துள்ளது.இது போன்ற, அரசு பதிவு பெறாத சிறுசேமிப்பு திட்டங்களை நடத்துவோர் மீது, பதிவுத்துறை மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்