உள்ளூர் செய்திகள்

அரசின் கட்டுப்பாடு: குழப்பத்தில் மெட்ரிக் பள்ளிகள்!

குறிப்பிட்ட சில தனியார் மெட்ரிக் பள்ளிகளின் தவறான செயல்பாடுகளை தொடர்ந்து, அரசும், கல்வித்துறையும் மெட்ரிக் பள்ளிகளை பல்வேறு விதிகள் மூலம் கண்காணிக்கும் பணியை துவக்கியுள்ளன. அனைத்து குழந்தைகளுக்கும், சமச்சீர் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் ஒப்புக் கொண்டு விட்டன. இருப்பினும், சில சக்திவாய்ந்த மெட்ரிக் பள்ளிகள், அரசின் சமச்சீர் கல்வி திட்டத்திற்கு ஆதரவு என்று பெரிய அளவில் விளம்பரம் செய்தாலும், தங்கள் பள்ளிகளை மத்திய அரசு பாடத்திட்டம் கொண்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாற்ற துவங்கி விட்டன. மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அரசால் புதிய பள்ளிகளை துவங்கவோ, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ இயலாது என்ற முடிவெடுத்ததும், மெட்ரிக் பள்ளிகளுக்கு ஆதரவு கொடுக்கப்பட்டது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் வெளிப்படையாக இருப்போம், தக்க ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வோம் என்று அரசு அறிவித்திருந்தாலும், இணைய தளத்தில் உள்ள பாடத் திட்டத்தின் படி நூல்கள் தயாரிக்கப்படுகின்றன என்ற செய்தியும் வெளியாகிறது. தமிழகக் கல்வி மேம்பாடு அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தினமலர் நாளிதழ் அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களை அறிந்து, பத்திரிகையில் அவற்றை வெளியிட்டு வருகிறது. தினமலர் போன்ற பத்திரிகைகளின் உயர்நெறி செயல்பாடுகள் விழலுக்கு இறைத்த நீராக மாறினால் நஷ்டம் தமிழகத்திற்கே. மெட்ரிக் பள்ளி இயக்குனரின் சமீபத்திய உத்தரவுப்படி, மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை (எல்.கே.ஜி., முதல் பிளஸ் 1 வகுப்பு வரை) மே மாதம் 16ம் தேதியில் இருந்து மட்டுமே துவங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மே மாதத்திலும் பள்ளிக்கு வர வேண்டும். அவர்களுக்கு விடுமுறையே இல்லை. அரசுப்பள்ளிகளில் அதிக சம்பளம் கிடைப்பதால், ஆசிரியர்கள் கிடைப்பது மிகவும் சுலபம். ஆனால், தனியார் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் தான் கிடைப்பார்கள். இன்று படித்த ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் கற்றுத் தருவது மிகுந்த வருவாயையும், குறைந்த நேர வேலையும் என்று மிகவும் ஈர்ப்புடையதாகி விட்டது.நன்கு ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள், பி.பி.ஓ.,வில் சேருகின்றனர். ஆக, தனியார் பள்ளியில் நல்ல ஆசிரியர்கள் கிடைப்பது அரிதான கால கட்டத்தில், ஜூன் மாதத்தில், மாணவர் சேர்க்கையை கொண்டு, புதிய ஆசிரியர் நியமனம் என்பது இயலாத ஒன்று. பல பகுதிகள் வளர்ந்து வருவதால், பல மெட்ரிக் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி எனும் வகையில், கட்டமைப்புகளை அதிகரித்து விட்டனர். இக்கட்டமைப்புக்குத் தகுந்த மாணவர் சேர்க்கை இல்லை எனில், மெட்ரிக் பள்ளிகளே அவதியுறும். இவ்வாறு மெட்ரிக்பள்ளி நிர்வாகி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்