கான்வென்ட் மோகத்தால் அரசு பள்ளிகளுக்கு ஆபத்து
திண்டுக்கல் காந்திகிராம பல்கலை ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் சேலம் எல்.ஆர்.என்., ஹோட்டலில் கருத்தரங்கு நடந்தது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் காந்தி கிராம பல்கலை பேராசிரியருமான பழனிதுரை பேசியதாவது:ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சி, பல்வேறு ஆராய்ச்சிகள் நடக்கின்றன. சென்னையில் பல்வேறு கருத்தரங்கு நடத்தி, கிராமங்களில் அடிப்படை தேவை பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.தற்போது தமிழகத்தில் தொடக்க கல்வி நிலை, குடிநீர் வினியோக சீர்திருத்தம், தலித் மக்களின் நிலை, சிறப்பு பொருளாதார மண்டல கிராமங்களில் ஏற்படும் நன்மை, தீமை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய மிகப்பெரும் ஜனநாயக நாடாக உலக அரங்கில் வீரநடை போட்டு வருகிறது. 50 சதவீத மக்கள் ஜனநாயக அடிப்படையில் வாழ்க்கை முறை நடத்தி வருகின்றனர். மீதி 50 சதம் மக்கள் ஜனநாயகத்தில் தன்னிலை பெற போராடி வருகின்றனர்.ஜனநாயகத்தில் தங்களின் பங்களிப்பை நிலைநாட்ட போராடுகின்றனர். பஞ்சாயத்துக்களில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டியது அவசியம். கிராம பஞ்சாயத்து தலைவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் பஞ்சாயத்துக்களில் கல்வி, குடிநீர், மருத்துவம், பொருளாதாரம் சீர் பெறும்.தனியார் தொடக்க பள்ளிகள் மீதான மோகத்தால் பெற்றோர் அரசு பள்ளிகளை ஒதுக்கி தள்ளும் நிலை உள்ளது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் தொடக்க பள்ளிகளுக்கு பிளாக் போர்டு முதல் உள்கட்டமைப்பு வசதிகள் அரசு செய்து கொடுக்கிறது. திறன்மிகு ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் தான் உள்ளனர். ஆனால், கிராமப்புற தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து மூடும் நிலை உள்ளது.கிராம பஞ்சாயத்து தலைவர்கள் திட்டப்பணிகளை மேற்கொள்வதிலும், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மட்டுமே அக்கறை காட்டும் நிலை உள்ளது. தொடக்க கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் எதனால் குறைகிறது என கண்டறிந்து, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்களையும், செய்து கொடுத்துள்ள வசதிகளை சட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.