உள்ளூர் செய்திகள்

தரம் உயர்ந்த பள்ளிகளில் தமிழாசிரியர் இல்லை

இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மணிவாசகம் தெரிவித்தார்.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், கோவை சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர், செயலாளராக பொள்ளாச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வெள்ளிங்கிரி மற்றும் இதர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்துக்கு பின், சங்க மாநிலத் தலைவர் மணிவாசகம் கூறியதாவது: இன்று, தமிழகம் முழுவதும் 3,324 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 1,300 சுயநிதி பள்ளிகள் என, மொத்தம் சுமார் 4,500 பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆகவே, இப்பள்ளிகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கென தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும்.கடந்த 1981ல் வெளியான பணி விதிகள் பற்றிய அரசாணை 720, முதுநிலைப்பட்டதாரி ஆசிரியராக பணிபுரியாமல் தலைமை ஆசிரியர் ஆகலாம் எனக் கூறுகிறது. இந்த அரசாணையை திருத்தி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள் மட்டுமே மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியராக பணிபுரிய முடியும் என மாற்றி உத்தரவு வெளியிட வேண்டும்.புதிதாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை; மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பாடங்களில் தேர்ச்சி சதவீதம் குறைந்தால் ஆசிரியர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, தமிழ் மட்டுமல்லாமல் பொருளாதாரம், வரலாறு, வணிகவியல் பாடங்களுக்கும் பணியிடங்களை உருவாக்க வேண்டும். பல ஏழை மாணவர்கள் மதிய உணவு இல்லாமல் சிரமப்பட்டு படிக்கின்றனர். பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களையும் சேர்க்க வேண்டும்.அதே போல் மாலை நேரங்களில் தேர்வுக்கென நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு சிற்றுண்டி வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இது, சிறப்பு வகுப்புகளில் மாணவர்கள் களைப்பு நீங்கி ஆர்வமுடன் பங்கேற்க உதவும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு நிதி, வைப்பு நிதி போன்றவற்றுக்கு விண்ணப்பித்தால் கிடைக்க ஆறு மாதமாகிறது.காலதாமதத்தை தவிர்க்க, அரசு கருவூல சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். விண்ணப்பத்தை ஆய்வு செய்து பள்ளி செயலாளரே நேரடியாக கையெழுத்திட்டு, மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் கருவூலத்துக்கு அனுப்ப நடவடிக்கை வேண்டும். இவ்வாறு, மணிவாசகம் கூறினார். ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகேந்திரகுமார், குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கவுதமன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்