உள்ளூர் செய்திகள்

நேரத்தை வீணடிக்கும் நிகழ்ச்சிகள்: நோபல் வெங்கட்ராமன்

வேதியியல் துறையில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். இந்தியாவைச் சேர்ந்த வெங்கட்ராமன், அமெரிக்காவில் வசித்து வருகிறார்.நோபல் பரிசு பெற்ற பின், முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.மும்பையில் அவர் அளித்த பேட்டி:இந்தியாவில் ஏராளமான விஞ்ஞானிகள் உள்ளனர். இந்திய அரசு கேட்டுக் கொண்டால், ஒரு பயோடெக்னாலஜி தொடர்பான விஷயத்தில் மேற்கொள்ளப்படும் தீவிரமான ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு உதவ தயாராக உள்ளேன். பயோடெக்னாலஜி என்பது மிகவும் கடினமான ஒரு பாடம் தான். இங்குள்ள டாடா இன்ஸ்டிடியூட், இந்திய அறிவியல் பயிற்சி மையம், அடிப்படை அறிவியலுக் கான தேசிய மையம் ஆகியவற்றில் ஏராளமான இந்திய விஞ்ஞானிகள் பணிபுரிகின்றனர்.ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சிக்காக என்னிடம் அவர்கள் உதவி கேட்டால், அதை பரிசீலிக்க தயாராக உள்ளேன். என்னிடம் உதவி கேட்காதபட்சத்தில், நானாக முன்வந்து அவர்களுக்கு உதவ முடியாது.அதே நேரத்தில் சம்பிரதாயமான விஷயங்களில், அது சம்பந்தமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஒருவரை வேலைக்கு தேர்வு செய்யும்போது, அவரது பின்னணியை பார்க்க கூடாது.பிரபலமான பள்ளியில் படித்தவரா, சாதாரணமான பள்ளியில் படித்தவரா என்பதை பார்க்கக் கூடாது. அந்த வேலைக்கான தகுதி அவருக்கு உள்ளதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். இந்தியாவில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களுக்கு, கவுரவ பேராசிரியராக கடந்த நான்கு ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களுக்காக வருவேன். இந்த கொள்கையில் மாற்றம் எதுவும் இருக்காது.இந்திய அரசு விரும்பினால், ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளேன். அதே நேரத்தில் சம்பிரதாயமான விஷயங்களில் கலந்து கொண்டு, நேரத்தை வீணடிக்க தயாராக இல்லை. இவ்வாறு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்