டிரான்ஸ்பார்மர் செக்யூரிட்டி கருவி கண்டுபிடித்து சாதனை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ். பி .கே . மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கேற்று ட்ரான்ஸ்பார்மர் செக்யூரிட்டி என்ற புதிய கருவியை கண்டுபிடித்து மாநில அளவில் 3 ம் இடத்தை பெற்றனர்.பள்ளிக்கல்வித்துறை, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் போட்டிகள் மாவட்டம், மண்டல அளவில் நடைபெற்றன. இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்கள் கோபிநாத், அபிஷேக், லலித்குமார் ஆகியோர் டிரான்ஸ்பார்மர் செக்யூரிட்டி என்ற என் புதிய கண்டுபிடிப்பை சமர்ப்பித்து, மாநில அளவில் நடந்த இறுதிப்போட்டியில் 3 ம் இடத்தினை பெற்று ஒரு லட்சம் ரொக்க பரிசினையும், முதல்வர் கையால் விருதையும் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களையும் அதற்கு உறுதுணையாக இருந்த அறிவியல் ஆசிரியர் சரவணக்குமாரையும் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன், எஸ்.பி.கே., கல்வி குழும தலைவர் ஜெயக்குமார், பள்ளி செயலர் மணிமுருகன், பள்ளி தலைவர் சிவராமகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் நிர்வாகத்தினர் பாராட்டினார்.இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது : நாங்கள் கண்டு பிடித்த மின் மாற்றி பாதுகாப்பு (டிரான்ஸ்பார்மர் செக்யூரிட்டி) மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கருவியாக இருக்கும். மின் கம்பத்தில் பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் பழுது பார்ப்பதற்காக மின்வாரிய ஊழியர்கள் முதலில் சம்பந்தப்பட்ட மின் மாற்றிக்குச் சென்று அதனை கைப்பிடி மூலம் ஆப் செய்துவிட்டு பின்னர் மின்கம்பத்தில் ஏறி பணிகளைச் செய்வர். இந்நிலையில் யாரேனும் தெரிந்தோ தெரியாமலோ மின்மாற்றியை ஆன் செய்து விட்டால் மின்கம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஊழியருக்கு உயிரிழப்பு ஏற்படும். இதனை தவிர்ப்பதற்கு நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக இயங்க கூடிய வகையில் ஒரு கண்டு பிடிப்பை கண்டுபிடித்துள்ளோம்.முதலில் கைபேசியில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மின் கம்பத்தில் ஏறி வேலை பார்க்கும் மின் ஊழியர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக யூசர் நேம், பாஸ்வேர்டு கொடுக்கப்படும். தற்போதுள்ள மின்மாற்றியில் ஒரு சிறிய பெட்டியில் உள்ள அமைப்புகளை நாங்கள் கண்டுபிடித்துள்ள கருவியுடன் இணைக்க வேண்டும். மின் கம்பத்தில் ஏறுவதற்கு முன் அலைபேசியின் மூலம் மின்மாற்றியை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள யூசர் நேம் பாஸ்வேர்டை பயன்படுத்தி ஆப் செய்து விட வேண்டும். வேலை முடிந்த பின்பு மீண்டும் அதே போல் யூசர் நேம் பாஸ்வேர்டை பயன்படுத்தி ஆன் செய்ய வேண்டும். இதனால் மின் ஊழியர்கள் எந்தவித பயமின்றி தங்கள் பணியைச் செய்யலாம்.