திரைப்பட கல்லுாரி விழா ராஜேஷ் புறக்கணிப்பு
சென்னை: சென்னை, தரமணியில் செயல்படும் எம்.ஜி.ஆர்., திரைப்படக் கல்லுாரி தலைவராக கடந்த ஆண்டு, செப்., மாதம், நடிகர் ராஜேஷ் நியமிக்கப்பட்டார். பல மாதமாக காலியாக இருந்த கல்லுாரி முதல்வர் பதவிக்கு கடந்த மாதம் மோகனகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், 77வது ஆண்டு விழா மற்றும் ஆண்டு மலர் வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் மாலை நடந்தது. இக்கல்லுாரியில் படித்த திரைப்பட இயக்குனர்கள் ஆபாவாணன், ஆர்.கே.செல்வமணி, மதன் காப்ரியேல், கார்த்திக் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவை தலைமை ஏற்று நடத்த கல்லுாரி தலைவரான நடிகர் ராஜேஷ் அழைக்கப்பட்டு இருந்தார். இவருக்காக ஒரு மணி நேரம் காலதாமதமாக நிகழ்ச்சி துவங்கியது. இருந்தும், ராஜேஷ் வரவில்லை. அவரை தொடர்புகொண்டு கேட்டபோது, படப்பிடிப்பில் இருப்பதால் வர முடியவில்லை என கூறி உள்ளார். இதனால், மாணவர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் அதிருப்தி அடைந்தனர்.