உள்ளூர் செய்திகள்

அமைச்சரின் மாவட்டத்தில் ஒழுகும் பள்ளி வகுப்பறைகள்

ஷிவமொகா: ஒழுகும் பள்ளி வகுப்பறைகளில், மாணவர்கள் குடை பிடித்து அமர்ந்து பாடம் கேட்கின்றனர்.ஷிவமொகா ஹொசநகரின் கொடுரியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எட்டாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 125 மாணவ,மாணவியர் படிக்கின்றனர். அனைவரும் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள்.பள்ளி கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேற்கூரை சிதிலமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. குறிப்பாக மழை காலத்தில் ஒழுகும். பள்ளி கட்டடத்தை பழுது பார்த்து தரும்படி, கிராமத்தினரும், மாணவர்களின் பெற்றோரும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை.கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பாவின் சொந்த மாவட்டத்திலேயே மாணவர்களுக்கு பாதுகாப்பான பள்ளி கட்டடம் இல்லாததால் கிராமத்தினர் வருத்தம் அடைந்துள்ளனர். சில நாட்களாக மழை பெய்வதால், பள்ளி மேற்கூரையில் தண்ணீர் கசிகிறது. மாணவர்கள் குடை பிடித்து அமர்ந்தபடி, பாடம் கேட்கின்றனர். எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்தில், உயிரை கையில் பிடித்து கல்வி படிக்கின்றனர்.கொடுரி கிராமத்தின் பள்ளி மட்டுமின்றி, பெரும்பாலான பள்ளிகளும் இதே சூழ்நிலையில் உள்ளன. பள்ளி சீரமைப்புக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுவதாக, அரசு மார் தட்டுகிறது. ஆனால் பாதுகாப்பான கட்டடம், குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும் இல்லாமல், மாணவர்கள் அவதிப்படுவதை, பல இடங்களில் காண முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்