உள்ளூர் செய்திகள்

சுகாதார ஆய்வாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க சிக்கல்

மதுரை: சுகாதார ஆய்வாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், சுகாதார ஆய்வாளர் படிப்புக்கான மதிப்பெண் வழங்கப்படாததால் யாரும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.2021 க்கு பிறகு டிப்ளமோ மதிப்பெண் வழங்கப்படாத நிலையில் தற்போது விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் போது மதிப்பெண் என்ற பகுதியில் எதுவும் நிரப்ப முடியவில்லை. இதனால் விண்ணப்பிக்க முடியவில்லை என தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் நலச்சங்க கவுரவ தலைவர் ராஜேந்திரன் தெரிவிக்கிறார்.அவர் கூறியதாவது:மருத்துவ கல்வி வாரியம் மூலம் தமிழகத்தில் 1100 சுகாதார ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஜூலை 11 ல் அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 31. பிளஸ் 2 முடித்தவர்கள் இரண்டாண்டு கால சுகாதார ஆய்வாளர் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு 20 மதிப்பெண், பிளஸ் 2க்கு 30 மதிப்பெண் மற்றும் டிப்ளமோ படிப்பில் 50 மதிப்பெண் என மொத்தமாக நுாறுக்கு மதிப்பெண் கணக்கிடப்படும்.இந்த மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். சுகாதார ஆய்வாளர் டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் 10ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவருமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அனைவருக்குமே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்கள் இருக்கிறது. ஆனால் டிப்ளமோ படிப்பிற்கு முதல் வகுப்பு, 2ம் வகுப்பு, டிஸ்டிங்ஷன் என குறிப்பிடுகின்றனர். இதனால் டிப்ளமோவுக்குரிய மதிப்பெண்ணை குறிப்பிட முடியவில்லை. தற்போது மதிப்பெண்கள் மூலமே 1100 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதால் விண்ணப்பிக்கவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்