உள்ளூர் செய்திகள்

பள்ளி வாகனங்களில் சோதனை: நடவடிக்கை தீவிரம்

பெங்களூரு: பள்ளிகளுக்கு மாணவ - மாணவியரை அழைத்து செல்லும் வாகனங்கள், எந்த பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுவது இல்லை. இதை தீவிரமாக கருதிய, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். விதிமீறல் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.பள்ளிகளுக்கு மாணவ - மாணவியரை அழைத்து செல்ல, வீட்டில் கொண்டு சேர்க்க, பெற்றோர் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர். பெரும்பாலான தனியார் பள்ளிகளும் கூட, பஸ்கள், மினி பஸ்களை பயன்படுத்துகின்றன.இத்தகைய வாகனங்களில், ஆடு, மாடுகளை அடைப்பது போன்று, பள்ளி சிறார்களை அடைத்து அழைத்து செல்கின்றனர். மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், மாணவர்களின் பாதுகாப்பில், அலட்சியம் காண்பிக்கின்றனர். இது, பல அசம்பாவிதங்களுக்கு காரணமாகிறது.தீவிர கண்காணிப்புபள்ளி வாகன ஓட்டுனரால், மாணவியர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளான உதாரணங்களும் உள்ளன. இதை தீவிரமாக கருதிய போக்குவரத்துத் துறை, பல்வேறு விதிமுறைகளை வகுத்திருந்தது. பள்ளி வாகனங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வாகனத்தில் ஜி.பி.எஸ்., சாதனம் பொருத்த வேண்டும். வாகனத்தின் நான்கு பக்கங்களிலும், பள்ளியின் பெயர், தொலைபேசி எண் இருக்க வேண்டும். இருக்கை திறனை விட, அதிகமான மாணவர்களை அழைத்து செல்லக்கூடாது. பள்ளி வாகனத்தில் மாணவியரின் பாதுகாப்புக்காக, மகளிர் ஊழியர் இருப்பது கட்டாயம் என்பது உட்பட, பல அம்சங்கள் இருந்தன. ஆனால் இந்த விதிமுறைகளை, சில வாகனங்கள் பின்பற்றுவது இல்லை.பள்ளி வாகனங்களில், கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ்., சாதனங்கள் இருப்பதில்லை. சில வாகனங்களில், இருக்கைகளுடன், பெஞ்சுகள் பொருத்தி கூடுதல் மாணவ - மாணவியரை அழைத்து செல்கின்றனர். பெங்களூரில் தினமும், இத்தகைய வாகனங்கள் அதிகமாக இயங்குகின்றன. வாகனங்களை முறைப்படி பதிவு செய்யாமல், மாணவர்களை அழைத்து செல்கின்றனர். தற்போது, ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில், பள்ளி வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கும்படி புதிய காங்., அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆங்காங்கே பள்ளி பஸ்கள் மற்றும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, சோதனை நடத்துகின்றனர். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்கும் பதிவு செய்கின்றனர்.பாதுகாப்பு குறைவுசில நாட்களுக்கு முன், இந்திரா நகரில், நம்பர் பிளேட் இல்லாத பஸ்சில், மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இதை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இந்த பஸ் நியூ ஹாரிஜான் இண்டர்நேஷனல் பள்ளிக்கு சொந்தமானது. பஸ்சை சோதித்த போது, கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ்., சாதனங்கள் இருக்கவில்லை. மாணவ - மாணவியரின் பாதுகாப்புக்கான எந்த வசதிகளும் அதில் இல்லை. பஸ்சை பறிமுதல் செய்த அதிகாரிகள், வேறொரு வாகனம் ஏற்பாடு செய்து, மாணவர்களை அனுப்பினர். பஸ்சுக்கு வரியும் செலுத்தவில்லை. இதன் உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பிஉள்ளனர்.சட்ட நடவடிக்கைபோக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:தனியார் பள்ளிகள், மாணவ - மாணவியர் பாதுகாப்புக்கு, முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வாகனங்களில் சிறார்களை, ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போன்று, அளவுக்கு அதிகமாக அழைத்து செல்கின்றனர். மாணவர்களின் உயிரோடு விளையாடுவது சரியல்ல. போக்குவரத்துத் துறை அதிகாரிகள், வெளியிட்ட விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோ, வேன் உட்பட எந்த வாகனங்களிலும், நிர்ணயித்த எண்ணிக்கையை விட, அதிகமான மாணவர்களை அழைத்து செல்லக்கூடாது. இத்தகைய வாகனங்களை கண்காணிக்கும் நோக்கில், நாங்கள் சிறப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். விதிமீறலான வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்