அங்கன்வாடி ஊழியர் பதவி உயர்வு இழுபறி
சிவகங்கை: சிவகங்கையில் மினி அங்கன்வாடி ஊழியர்களாக பணியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், பிரதான அங்கன்வாடி ஊழியர் பதவி வழங்காமல் அரசு இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களின் கீழ் 4480 மினி அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. இவற்றுக்கு 2017 செப்., முதல் 2018 வரை ஊழியர்கள் நியமித்தனர். இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பிரதான அங்கன்வாடி மைய ஊழியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். சிவகங்கை உட்பட சில மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி பிரதான அங்கன்வாடி மைய ஊழியராக, 2023 ஜனவரியில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிவகங்கையில் உள்ள 480 மினி அங்கன்வாடி மைய ஊழியர்களில், பணியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற, 78 பேருக்கு பதவி உயர்வு வழங்கவில்லை.இதுகுறித்து, தமிழக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்க மாநிலச் செயலர் பாக்கியமேரி கூறியதாவது:சிவகங்கையில் 2022ம் ஆண்டு செப்டம்பரில் ஐந்து ஆண்டு பணி நிறைவு பெற்ற 78 பேர், பிரதான, அங்கன்வாடி ஊழியர் பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கின்றனர். அரசு உத்தரவுப்படி, 2023 ஜனவரியில் பதவி உயர்வு தர வேண்டும். அதற்கான கவுன்சிலிங் கூட, ஜூன் 9ல் தான் நடத்தினர். அது முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் பதவி உயர்வு கிடைக்கவில்லை. சிவகங்கை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் கேட்டால், அதற்கான கோப்பு கலெக்டரிடம் நிலுவையில் இருப்பதாக கூறுகின்றனர். இதுபற்றி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். பதவி உயர்வு இழுத்தடிப்பால் மாநில சீனியாரிட்டி பட்டியல் பாதிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.சிவகங்கை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பரமேஸ்வரி கூறுகையில், அலுவலக கண்காணிப்பாளர் வாயிலாக பதவி உயர்வு கவுன்சிலிங் முடித்த ஊழியர் பட்டியலை கலெக்டருக்கு அனுப்பி விட்டோம். அவர் கையெழுத்திட்டால் பதவி உயர்வு உத்தரவு வழங்கப்படும், என்றார்