அரசு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தடை
அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர வசதியாக, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சுயநிதி கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்ந்தாலும், அரசே கட்டணத்தை செலுத்துகிறது. இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி யில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவரிடம், 7,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது சர்ச்சை ஆனது. இந்நிலையில், கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பிச் செலுத்த, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சாந்திமலர், மருத்துவக் கல்லுாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:* மருத்துவ கல்லுாரிகளில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் சேரும் மாணவர்களிடையே, கல்வி கட்டணம், புத்தகம், உணவு, விடுதி உட்பட எவ்வித கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது* இந்த படிப்பில் சேரும் மாணவியர், புதுமை பெண் திட்டம் உட்பட அனைத்து வித கல்வி உதவித் தொகை பெற தகுதி உடையவர்கள்* அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சில இடர்பாடுகள் இருப்பதால், கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த வேண்டும். இதற்காக, முதுநிலை பேராசிரியர் வாயிலாக வழிகாட்டு குழு அமைக்க வேண்டும்* மாணவர்களின் கல்வி முன்னேற்றம்; குழுவின் செயல்பாடுகள் குறித்து, கல்லுாரி முதல்வர்கள் கண்காணித்து, இயக்குனரகத்துக்கு தெரிவிக்க வேண்டும். சிறப்பு நேர வகுப்புகள் நடத்தி, மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும். மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்*முக்கியமாக, 7.5 ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம், கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தால், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை, இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.