உள்ளூர் செய்திகள்

கவனிப்பில்லாத அரசு: ஐ.டி.ஐ.,திசை மாறும் மாணவர்கள்

 ஓசூர் அடுத்த தின்னூரில் அரசு ஐ.டி.ஐ., தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் ஐ.டி.ஐ., தொழில் நுட்ப படிப்பு, கொடிகட்டி பறந்தபோது, தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஐ.டி.ஐ., கல்லூரிகளில் ஓசூர் ஐ.டி.ஐ., கல்லூரியும் ஒன்றாக விளங்கியது.கல்லூரியில் தங்கி படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்காக, சலுகை கட்டணத்தில் தங்கி படிக்க, 1977ம் ஆண்டு மாணவர் விடுதி அமைக்கப்பட்டது. தற்போது, 94 மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். விடுதி பராமரிப்புக்காக மாணவர்களிடம் மாதம் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கல்லூரி நிர்வாக தரப்பில், இலவசமாக தண்ணீர் வசதி மட்டும் செய்து கொடுக்கப்படுகிறது. விடுதி மாணவர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் படிப்பு மற்றும் உணவு செலவுக்காக வகுப்பு முடிந்ததும் மாலை நேரத்திலும், விடுமுறை நாளிலும் பகுதி நேரமாக வேலைக்கு செல்கின்றனர்.இதனால், மாணவர்கள் மத்தியில் பணம் புழக்கம் அதிகமாக உள்ளது. மாணவர்கள் விடுதி, கல்லூரியில் இருந்து தனியாக காட்டுப்பகுதி அருகே எந்த கண்காணிப்பும் இல்லாமல் உள்ளது.இதை சாதகமாக பயன்படுத்தி மாணவர்கள், தங்களுக்கு பழக்கமான வெளியாட்களை விடுதியில் தங்க அழைத்து வருகின்றனர்.விடுதி அறையில் வெளியாட்களுடன் சேர்ந்து இரவில் மது குடித்து சீட்டு விளையாடுவதால், அவர்களுடைய வாழக்கை பாதை திசைமாறி செல்கிறது.விடுதி வார்டனும், கல்லூரி நிர்வாக தரப்பும், இரவு நேரத்தில் விடுதியை சென்று கண்காணிப்பது இல்லை. விடுதியை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் இல்லாதால், மாணவர்கள் இரவில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு தியேட்டர்களுக்கு செல்கின்றனர்.இது குறித்து கல்லூரி முதல்வர் மணியிடம் கேட்டபோது, அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்